போட்லேண்ட் மின் உற்பத்தி நிலையத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் ஆர்ப்பாட்டத்தில்

Report Print Gokulan Gokulan in சமூகம்

போட்லேண்ட் நீர் மின் உற்பத்தி நிலையத்தினால் நில தாழிறக்கத்திற்கு உள்ளான குடியிருப்புக்களின் உரிமையாளர்கள் இது வரையில் நட்டஈடு வழங்கப்படவில்லை என தெரிவித்து ஆர்ப்பாட்டமொன்றை நடத்தியுள்ளனர்.

குறித்த ஆர்ப்பாட்டம் கினிகத்தேன பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கித்துல்கல, பொல்பிட்டிய பகுதியில் நேற்று நடைபெற்றுள்ளது.

இது தொடர்பில் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கருத்து தெரிவிக்கையில்,

களனி ஆற்றை மறித்து நிர்மாணிக்கப்படும் போட்லேண்ட் நீர் மின் உற்பத்தி நிலையத்திற்கு பொல்பிட்டியவிலிருந்து கித்துல்கல, கல்பொத்தாவல வரையில் 5 கிலோமீட்டர் தூரத்திற்கு சுரங்கப்பாதை அமைக்கப்படுகிறது.

இதனால் ஏற்பட்ட நில தாழிறக்கத்தால் 34 குடியிருப்புகள் பாதிப்புக்களுக்கு உள்ளாகியிருந்தன. இதற்கு நட்டஈடு வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டதுடன், 27 குடியிருப்பாளர்களுக்கு வாடகை வீட்டில் தங்குவதற்காக மாதாந்தம் வாடகைப்பணமும் வழங்கப்பட்டு வருகின்றது.

இருப்பினும் இதுவரையில் எமக்கான நட்டஈடு பணத்தை வழங்கவில்லை. மீன் உற்பத்தி நிலையத்தின் பணிகள் நிறைவடையும் தருவாயிலுள்ள போதிலும் பாதிக்கப்பட்டுள்ள எமக்கு இதுவரையில் ஈட்டஈடு வழங்க அரசாங்கம் முன்வரவில்லை என சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந்த நிலையில், மின் நிலைய கட்டுமான பொறுப்பதிகாரி கமல் லக்ஷிர இரண்டு மாதத்திற்குள் பாதிக்கப்பட்ட குடியிருப்பாளர்களுக்கு நட்டஈடு வழங்க நடவடிக்கை எடுப்பதாக கடிதம் முலம் அறிவித்ததையடுத்து ஆர்பாட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளது.