செல்வம் அடைக்கலநாதன் நீதி அமைச்சரிடம் முன்வைத்துள்ள கோரிக்கை

Report Print Shalini in சமூகம்

அனுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரதம் இருக்கும் அரசியல் கைதிகளுக்கு நியாயமான தீர்வினை வழங்கக் கோரி நாடாளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளரும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பில் நீதி மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் தலதா அத்துகோரளவுக்கு கடிதம் ஒன்றினை அனுப்பியுள்ளார்.

குறித்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

அனுராதபுரம் சிறைச்சாலையில் உள்ள அரசியல் கைதிகள் அவர்கள் பிரச்சினைகள் தொடர்பாக ஓர் தீர்க்கமான முடிவினை பெற்றுக்கொள்ளும் நோக்கத்தில் கடந்த 15 நாட்களுக்கு மேலாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தற்பொழுது அவர்களின் நிலை மிகவும் மோசமாகியுள்ளதோடு, கடும் மோசமான நிலைமைக்கு தள்ளப்பட்ட மூவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மதியரசன் சுலக்சன், கணேசன் தர்சன் மற்றும் ராசதுரை திருவருள் ஆகியோரே உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளார்கள்.

பல தசாப்தங்களாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் அரசியல் கைதிகளின் பிரச்சினைகளுக்கு துரிதமான தீர்வைக் காண வேண்டும்.

இந்த விடயத்தில் உடனடியாக தலையிட்டு நியாயமான தீர்வினை வழங்க வேண்டும் என செல்வம் அடைக்கலநாதன்தெரிவித்துள்ளார்.