உங்களது காணிகள் தொடர்பில் நீதிமன்றத்தை நாடியுள்ளீர்களா?

Report Print Yathu in சமூகம்

உங்கள் சொந்தக்காணிகள் விடுவிக்கப்படாதது தொடர்பில் நீதிமன்றத்தை நாடியுள்ளீர்களா? என ஐக்கிய நாடுகளின் இடைக்கால நீதி தொடர்பான விசேட பிரதிநிதி பப்லோ டி கிறிப் கேப்பாப்புலவு மக்களிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.

முல்லைத்தீவிற்கு இன்று விஜயம் செய்த ஐக்கிய நாடுகளின் இடைக்கால நீதி தொடர்பான விசேட பிரதிநிதி பப்லோ டி கிறிப், பல்வேறு இடங்களுக்கும் சென்று நிலைமைகளை பார்வையிட்டுள்ளார்.

இந்த நிலையில் குறித்த குழுவினர் தமது பூர்வீகக்காணிகளை விடுவிக்கக்கோரி 219 நாட்களுக்கு மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்களை இன்று பகல் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர்.

இதன்போது, யுத்தம் நிறைவடைந்து எட்டு வருடங்கள் பூர்த்தியாகியிருக்கின்றன. எங்களது சொந்த நிலங்கள் விடுவிக்கப்படவில்லை. நாங்கள் வீடுகள் இன்றியும் வாழ்வாதாரம் இன்றியும் தொடர்ந்தும் வாழந்து வருகின்றோம்.

எட்டு தலைமுறைகளாக நாங்கள் வாழ்ந்த எங்கள் நிலங்களை விடுவதாக பல்வேறு வாக்குறுதிகளை வழங்கினார்கள். ஆனால் இதுவரைக்கும் நாங்கள் 219 நாட்களாக போராடி கொண்டிருக்கின்றோம்.

எங்களது நிலங்களுக்கு போவதற்கு விரைவாக அனுமதிக்க வேண்டுமென போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் தெரிவித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, உங்களது காணிகள் தொடர்பில் நீதிமன்றத்தை நாடியுள்ளீர்களா? அரசாங்கத்திடம் அல்லது அரச பிரதிநிதிகளிடம் கேட்டுள்ளீர்களா? என ஐக்கிய நாடுகளின் இடைக்கால நீதி தொடர்பான விசேட பிரதிநிதி பப்லோ டி கிறிப், கேள்வி எழுப்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.