வருடத்திற்கான சமாதான தூதுவர் விருது வீ.ஆனந்தசங்கரிக்கு

Report Print Yathu in சமூகம்

இந்த வருடத்திற்கான சமாதான தூதுவர் விருது தமிழர் விடுதலைக் கூட்டணி கட்சியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரிக்கு வழங்கப்பட்டுள்ளது.

அக்கரைப்பற்று, மெங்கோ கார்டன் ஹோட்டலில் கடந்த சனிக்கிழமை(14) இடம்பெற்ற தேசகீர்த்தி விருதுகள் வழங்கும் நிழ்வின்போதே அவருக்கு குறித்த விருது வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

சமாதான நீதவான்கள் பேரவையின் தெற்காசியாவிற்கான இலங்கை வலையமமைப்பின் ஏற்பாட்டில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் சமாதானத்திற்காக பணியாற்றியவர்களை கௌரவிக்கும் வகையில் பலருக்கு விருதுகள் வழங்கி வைக்கப்பட்டிருந்தன.

இதன்போது, நல்லிணக்க மற்றும் சமத்துவத்துக்காக பாடுபட்ட 30இற்கும் மேற்பட்ட சமாதான நீதவான்களுக்கும் கவுன்சிலின் தலைவர் மகேஸ்வரன் ஆகியோருக்கும், தேசகீர்த்தி விருதுகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

நீதியையும் சமாதானத்தையும் நிலைநாட்டக் கூலியற்று வேலைசெய்யும் சமாதானத் தொண்டர்களை கௌரவிக்கும் நிகழ்வாகவும் இந்த நிகழ்வு இடம்பெற்றது.

இந்நிலையில், கடந்த 2006ஆம் ஆண்டு யுனெஸ்கோவினால் வழங்கப்படும் விருதான, சமாதானத்திற்கும் சகிப்பு தன்மைக்குமான விருது வீ.ஆனந்தசங்கரிக்கு வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.