யாழில் டெங்கு நோயின் தீவிரம்! அடுத்தடுத்து இருவர் பலி

Report Print Rakesh in சமூகம்

டெங்குக் காய்ச்சலால் பீடிக்கப்பட்ட பாடசாலை மாணவியும், தாய் ஒருவரும் சிகிச்சை பயனளிக்காது உயிரிழந்துள்ளனர்.

கலட்டி அம்மன் வீதி, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த கணேசமூர்த்தி சாரா (வயது 9) என்ற மாணவி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நேற்று(15) உயிரிழந்துள்ளார்.

இணுவில் கிழக்கைச் சேர்ந்த சிறிராஜா மல்லிகாதேவி (வயது 49) என்பவரும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நேற்று முன்தினம் சனிக்கிழமை உயிரிழந்துள்ளார்.

பாடசாலையில் கடந்த 11ஆம் திகதி மாணவி சோர்வடைந்த நிலையில் இருந்துள்ளதுடன், பின்னர் பெற்றோருக்குத் தகவல் வழங்கப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து, அவர்கள் வந்து மாணவியைத் தனியார் சிகிச்சை நிலையத்தில் காண்பித்து மருந்து மாத்திரைகள் பெற்று வீட்டில் வைத்துக் கவனித்துவந்துள்ளனர்.

காய்ச்சல் குறையவில்லை. 4ஆம் நாள் (சனிக்கிழமை) தனியார் வைத்தியசாலையில் சேர்த்தனர். அங்கிருந்து சிறுமி மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

எனினும், சிகிச்சை பயனளிக்காது நேற்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை மாணவி உயிரிழந்துள்ளார்.

டெங்கு தாக்கத்தால் உயிரிழந்த குடும்பப் பெண்ணும் காய்ச்சல் காரணமாகத் தனியார் சிகிச்சை நிலையத்தில் மருந்து மாத்திரையைப் பெற்று வீட்டில் இருந்துள்ளார்.

காய்ச்சல் அதிகரித்த நிலையில் 4ஆவது நாளான நேற்றுமுன்தினம் சனிக்கிழமை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார்.

அவர் வைத்தியசாலையில் சேர்க்கப்படும்போது உயிரிழந்துவிட்டமை உறுதிப்படுத்தப்பட்டது. மருத்துவ சோதனையில் அவருக்கு டெங்கு காய்ச்சல் இருந்தமை உறுதிப்படுத்தப்பட்டது.

இதேவேளை, விசாரணைகளின் பின்னர் இருவரது சடலங்களும் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.