பொலிஸாரின் அர்ப்பணிப்பான சேவைக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பை வழங்க வேண்டும்

Report Print Rusath in சமூகம்

சிவில் சமூக இயல்பு வாழ்க்கையை சீர்குலையாமல் பாதுகாப்பதில் பொலிஸார் மேற்கொள்ளும் அர்ப்பணிப்புக்களுக்கு பொதுமக்கள் தமது பூரண ஒத்துழைப்பை வழங்க வேண்டும் மட்டக்களப்பு மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சமன் யட்டவர தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு, வவுணதீவு பொலிஸ் நிலையத்தின் அரையாண்டுப் பொலிஸ் பரிசோதனை வவுணதீவு பொலிஸ் வளாகத்தில் இன்றைய தினம் இடம்பெற்றது.

பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பி.ரி.நஸீர் தலைமையில் பொலிஸ் வளாகத்தில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மட்டக்களப்பு மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் சமன் யட்டவர பரிசோதனைகளை ஏற்றுக்கொண்டதுடன், அணிவகுப்பு மரியாதையையும் ஏற்றுக்கொண்டார்.

இதன்போது பொலிஸார் பயன்படுத்தும் வாகனங்கள், துப்பாக்கிகள், என்பனவற்றின் தராதரம் மற்றும் பராமரிப்பு என்பன பரிசீலிக்கப்பட்டதுடன் பொலிஸாரின் ஆளுமைத் தோற்றம், ஆரோக்கியம் உட்பட அவர்களது நலன்களும் கருத்திற் கொள்ளப்பட்டது.

இங்கு அவர் தொடர்ந்தும் கருத்து வெளியிடுகையில்,

24 மணிநேரமும் மக்களுக்குச் சேவை செய்யும் அர்ப்பணிப்பில் ஈடுபட்டுள்ள பொலிஸார் சிறந்த முன்மாதிரிகளைக் கடைப்பிடிப்பவர்களாக இருப்பதன் மூலம் சமூகத்தைச் சிறப்பாக வழி நடத்த முடியும்.

இந்த சந்தர்ப்பத்தில் பொலிஸ், பொதுமக்கள் உறவு என்பது மிகவும் மதிப்புக்குரியதாக இருக்க வேண்டும்.

அதேவேளை, சிவில் சமூக இயல்பு வாழ்க்கையை சீர்குலையாமல் பாதுகாப்பதில் பொலிஸார் மேற்கொள்ளும் அர்ப்பணிப்புக்களுக்கு பொதுமக்கள் தமது பூரண ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.