பனாமா ஆவணங்களை அம்பலப்படுத்திய பெண் ஊடகவியலாளர் படுகொலை!

Report Print Jeslin Jeslin in சமூகம்

உலகத் தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் பலரையும் குலைநடுங்கச் செய்த ‘பனாமா ஆவணம்’ விவகாரத்தில் முன்னின்று உழைத்த புலனாய்வு ஊடகவியலாளரான டெப்னி கொரோனா காலிஸியா நேற்று (16) படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

மால்ட்டாவின் கிராமங்களில் ஒன்றான மால்பினிஜா என்ற இடத்தில், இவர் தனது காரில் பயணித்துக்கொண்டிருக்கும்போது, திடீரென கார் வெடித்துச் சிதறியதால் இவர் உயிரிழந்துள்ளார்.

இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார், இது கார் குண்டுத் தாக்குதல் என்பதை உறுதி செய்துள்ளனர்.

டெப்னியின் படுகொலை குறித்து கண்டனம் தெரிவித்துள்ள மால்ட்டா பிரதமர் ஜோசப் மஸ்கட், இது ஊடக சுதந்திரத்தின் மீதான மிலேச்சத்தனமான தாக்குதல் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

டெப்னியின் மோசடிக் குற்றச்சாட்டுகளில் சிக்கியுள்ளவர்களில் பிரதமர் ஜோசப்பும் ஒருவர்.

மால்ட்டா தீவின் அரசியல்வாதிகள் பலரின் மோசடிகளை தனது ‘ப்ளொக்’ மூலம் அண்மைக்காலமாக வெளிச்சத்துக்குக் கொண்டுவந்தவர் டெப்னி. ஐம்பத்து மூன்று வயதாகும் இவர், மூன்று பிள்ளைகளுக்குத் தாயாவார்.

பனாமா பத்திர விவகாரத்தை வெளிச்சத்துக்குக் கொண்டுவந்த இருபத்தெட்டு ஊடகவியலாளர்களுள் டெப்னி பிரதானமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.