யுத்தகாலத்தில் கைவிடப்பட்ட ஊர்திகளை அப்புறப்படுத்தும் இராணுவம்!

Report Print Yathu in சமூகம்

முல்லைத்தீவு – ஒட்டுசுட்டான் ஆறுமுகம் வித்தியாலய வளாகத்தில் போர்க்காலப்பகுதியில் கைவிடப்பட்ட ஊர்திகளை பல தடவை அகற்றக்கோரியும், அகற்றாத நிலை தொடர்ந்தும் காணப்பட்டு வந்தது.

இது தொடர்பில் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்களுடன் தொலைபேசியில் உரையாடிய ஒட்டுசுட்டான் பொலிஸ் அதிகாரி அந்த ஊர்திகள் அகற்றப்படும் என உறுதி வழங்கினார்.

இது தொடர்பாக மேலும் தெரியவருகையில்,

அந்த ஊர்திகள் உருக்குலைந்த நிலையில், அவற்றைச் சூழ புதர்கள் வளர்ந்து காணப்பட்டன. இது ஒரு தொடக்கநிலைப் பாடசாலை என்பதும் குறிப்பிடத்தக்கது.

அங்கு கற்கும் மாணவர்கள் நாளாந்தம் பயத்துடனே தமது கற்றல், விளையாட்டு நடவடிக்கைகளில் ஈடுபட்டுவந்தனர். இது தவிர இந்த உருக்குலைந்த ஊர்திகளுக்கு பாதுகாப்பாக பாடசாலை வளாகத்தில் இராணுவத்தினர் காவலில் இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பாக பாடசாலை நிர்வாகம், மாவட்ட செயலாளருக்கும் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்களுக்கும் தெரியப்படுத்தியிருந்தது.

இந்த நிலையில், 2015.05.11 அன்று மாவட்ட செயலாளர் அவர்களால், முல்லைத்தீவு பாதுகாப்புபடை தலைமையகத்திற்கு குறித்த விடயம் தொடர்பாக கடிதம் மூலம் அறிவித்தல் வழங்கப்பட்டிருந்தது.

மேலும் து.ரவிகரன் அவர்களால் கடந்த 19.07.2016 அன்று முதலமைச்சர் அவர்களுக்கு தெரியப்படுத்தபட்டிருந்த நிலையில், முதலமைச்சர் அவர்களாலும் முல்லைத்தீவு பாதுகாப்புப்படை தலைமையகத்திற்கு கடிதம் மூலம் அறிவித்தல் வழங்கப்பட்டது.

இந்த அறிவித்தல்களால் தீர்வுகள் ஏதும் கிடைக்காத நிலையில், முதலமைச்சர் அவர்களுக்கு வடமாகாண சபை உறுப்பினர் ரவிகரன் அவர்கள் மீண்டும் இரண்டாவது முறையாக கடந்த 2017.09.19 அன்று கடிதம் மூலம் தெரியப்படுத்தினார்.

முதலமைச்சர் அவர்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கு கடந்த 26.09.2017 அன்று கடிதம் மூலம் தெரியப்படுத்தியதோடு, கடிதத்தின் படியை து.ரவிகரன் அவர்களுக்கும் அனுப்பி வைத்திருந்தார். அப்போதும் இந்தச்சிக்கலுக்கு தீர்வு கிடைக்காத நிலையே காணப்பட்டது.

இதனையடுத்து கடந்த 17.10.2017 அன்று து.ரவிகரன் அவர்கள், அவரது ஊடகப்பணியாளரை குறித்த பாடசாலைக்கு அனுப்பி அங்குள்ள நிலவரங்களைப் பார்ப்பதுடன் புகைப்படம் எடுத்துவருமாறும் பணித்திருந்தார்.

ஊடகப்பணியாளர் அங்கு சென்ற சமயம் இராணுவத்தினர் வாகனங்களை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தனர். மேலும் அந்த இடத்தில் ஒட்டுசுட்டான் பிரதேச பொலிஸ் பொறுப்பதிகாரியும் இருந்துள்ளார்.

அப்போது பொலிஸ் பொறுப்பதிகாரி ஊடகப்பணியாளருடன் உரையாடியதுடன், ரவிகரன் அவர்களுடன் தொலைபேசியில் அழைத்து உரையாடினார்.

அப்போது முதலமைச்சருடைய கடிதம் தமக்கு கிடைத்திருப்பதாகவும், அந்தவகையில் இராணுவத்தினர் தற்போதே ஊர்திகளை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருப்பதாகவும், இன்னும் மூன்று நாட்களுக்குள் அனைத்து ஊர்திகளும் அப்புறப்படுத்தப்பட்டுவிடும் என்றும் ரவிகரன் அவர்களுக்கு உறுதிவழங்கியிருந்தார்.