வித்தியா வழக்கின் துரித தீர்ப்பிற்குக் காரணம் இதுதான்!

Report Print Thamilin Tholan in சமூகம்
854Shares

விஜய் ரசிகர்கள், அஜித் ரசிகர்கள் நீதிமன்றத்தை உடைத்த காரணத்தினால் தான் வித்தியா படுகொலை வழக்கு யாழ். மேல் நீதிமன்றத்தில் இடம்பெறுகின்றது என்று கூறுவதை நாம் ஏற்றுக்கொள்ள முடியாது என யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர் தெரிவித்துள்ளனர்.

நீதிமன்றம் மீதான தாக்குதல் சம்பவமானது எந்தவொரு வகையிலும் நியாயப்படுத்த முடியாதது. வித்தியாவுக்கு ஆதரவான மக்களின் எழுச்சி மக்களின் கோரிக்கை அந்த வழக்கில் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.

மக்களுடன் இணைந்து சட்டத்தரணிகள் சங்கங்களும் விடுத்த வேண்டுகோளுக்கமைய வித்தியா படுகொலை வழக்கு யாழ். மேல் நீதிமன்றத்தில் மூன்று தமிழ் நீதிபதிகளைக் கொண்ட ட்ரயல் அட்பார் விசாரணைக்குழு அமைக்கப்பட்டு விசாரணைகள் துரிதமாக இடம்பெற்றுத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

யாழ். பல்கலைக்கழகத்தில் நேற்று பிற்பகல் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கில் தென்னிலங்கை சிங்கள நீதிபதிகளை ட்ரயல் அட்பார் நீதிபதிகளாக விசாரிக்க சட்டமா அதிபர் திணைக்களம் முயன்றது.

ஆனால், இந்த விவகாரத்தில் துரதிஷ்டவசமாக யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் ஆரம்பத்தில் போராடவில்லை.

விஜய் மற்றும் அஜித் ரசிகர்கள் தான் இந்த முயற்சிக்கெதிராகக் கிளர்ந்தெழுந்தது. அந்த வகையில் அவர்களுடைய போராட்டம் தான் வித்தியா படுகொலை வழக்கு யாழ். மேல் நீதிமன்றத்தில் நடைபெறுவதற்கு உறுதுணையாக அமைந்தது.

விஜய், அஜித் ரசிகர்களின் தலையீட்டால் வித்தியா படுகொலை வழக்கை யாழ். மேல் நீதிமன்றத்தில் நடத்த முடியுமெனில் ஏன் படித்த மாணவர் சக்தியான உங்களால் 25 நாட்களாகத் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வரும் அரசியல் கைதிகளுக்கு ஆதரவாக ஒரு மக்கள் புரட்சியையோ அல்லது மக்கள் போராட்டங்களையோ முன்னெடுக்க முடியாதுள்ளது? என ஊடகவியலாளரொருவர் கேள்வியெழுப்பினார்.

குறித்த கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் அவர்கள் மேலும் தெரிவிக்கையில்,

வித்தியா படுகொலை வழக்கில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் போன்று தான் அரசியல் கைதிகள் விவகாரத்தில் தற்போது பல்கலைக்கழக மாணவர் சமூகமும், மக்களும் இணைந்து கோரிக்கைகள் முன்வைத்துள்ளனர்.

எனவே, தமிழ் அரசியல் கைதிகள் விவகாரம் தொடர்பில் பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம் நடத்தவில்லை, கருத்துத் தெரிவிக்கவில்லை என்றில்லை.

நாம் அரசியற் கைதிகள் விவகாரத்தில் தொடர்ச்சியாகக் குரல் கொடுத்து வருகின்றோம். அனுராதபுரம் சிறைச்சாலையில் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளுக்கு ஆதரவாக கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்தோம்.

அதன் பின்னர் உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்தோம். பின்னர் இந்த விவகாரம் தொடர்பில் ஜனாதிபதி உடனடித் தீர்வு வழங்குவார் என வடமாகாண ஆளுநர் தெரிவித்ததற்கமைய கொழும்பு சென்று ஜனாதிபதியைச் சந்தித்துக் கலந்துரையாடினோம்.

ஆனால், குறித்த சந்திப்பு எங்களுக்குத் திருப்திகரமானதாக அமையவில்லை.

இந்த நிலையில் தான் தொடர் வகுப்புப் பகிஷ்கரிப்புப் போராட்டத்திற்கு யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினராகிய நாம் அழைப்பு விடுத்துள்ளோம்.

இந்த விடயத்தில் அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடர்பில் யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் ஆராய்ந்து முடிவெடுக்கும் என்றனர்.