சித்தாண்டி முருகன் ஆலயத்தின் குழப்பகரமான சூழ்நிலைக்கு முற்றுப்புள்ளி

Report Print Kumar in சமூகம்

கிழக்கிலங்கையில் புகழ்பெற்ற சித்தாண்டி சித்திர வேலாயுதர் பேராலயத்தில் ஏற்பட்டுள்ள தற்போதைய நிருவாகத்தினரது தொடர் குழப்பகரமான சூழ்நிலைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் முகமாக பொதுமக்கள் ஒன்றுகூடி இடைக்கால நிருவாக சபையினை தெரிவுசெய்துள்ளர்.

இந்த நிகழ்வு, நேற்றைய தினம்(04) நடைபெற்றுள்ளதுடன், குறித்த கோயிலின் நிருவாகக் கட்டமைப்பு குடிப்பரம்பரையை மையமாக கொண்டுள்ளது.

கடந்த பல ஆண்டு காலமாக ஆலயத்தின் முக்கிய பொறுப்புக்களை வகிக்கும் குடிப்பரம்பரையினருக்குள் ஏற்பட்ட பிணக்கு காரணமாக பலவாறாக பிரிந்த குடிப்பரம்பரையினர் ஆலயத்தின் நிருவாக கட்டமைப்பை கைப்பற்ற முற்பட்டுள்ளனர்.

இந்த நிலையில்,ஆலயத்திற்கு உள்ளேயும், வெளியிலும் முட்டிமோதும் நிலைமை அடிக்கடி ஏற்பட்டு பொலிஸ் நிலையம் மாத்திரமல்ல நீதிமன்று ஊடாகவும் வழக்குகள் இடம்பெற்று வருகின்றது.

ஆலயத்தின் மகோற்சவ காலங்களில் அரங்கேறும் நிருவாகத்தின் குடிப்பரம்பரை மற்றும் அதிகாரத்தைக் கைப்பற்றும் வன்முறையுடன்கூடிய அதிகார பரவலாக்கம் இம்முறை சூரன்போர் வரைக்கும் தொடர்ந்துள்ளது.

அதனடிப்படையில் குறித்த முருகன் ஆலயத்தில் வருடாந்தம் மாவட்டத்தின் பல பாகங்களிலும் இருந்து கந்தசஷ்டி விரதம் அனுஸ்டிக்க வருகின்ற பக்தர்கள் பல நூற்றுக் கணக்கானவர்கள் மத்தியில் இம்முறை சூரன்போர் இடை நடுவில் நிறுத்தப்பட்ட சம்பவமானது மாவட்டத்திலுள்ள அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

இதனால், சித்தாண்டி சித்திர வேலாயுதர் பேராலயத்தின் நிருவாக முரண்பாட்டை ஒரு பேசுபொருளாக கொண்டு சமூக வலைத்தள ஊடகங்கள் உட்பட புத்திஜீவிகளும் தங்களின் ஆதங்கங்களை வெளியிட்டுள்ளனர்.

இந்த நிலையில் நேற்று, மக்களின் கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகள் பெறப்பட்டன் பின்னர் மக்களின் ஏகோபித்த முடிவாக ஆலயத்தின் அனைத்துச் செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்வதற்கான தற்காலிக உறுப்பினர்களாக 11 பேர் கொண்ட ஆளுமை மிக்க நிருவாக குழுவினர் உட்பட அதனோடு சார்ந்து 20பேர் கொண்ட அங்கத்துவ குழுவொன்றும் பொதுமக்களினால் தெரிவு செய்யப்பட்டது.

குறித்த இடைக்கால நிருவாக குழுவினர் எதிர்வரும் புதன்கிழமை(8) செங்கலடி பிரதேச செயலாளர் ஊடான போச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளனர்.

அதனைத் தொடர்ந்து நீமன்றுக்கும் தங்களின் கோரிக்கையை முன்வைக்கவுள்ளதாக இடைக்கால நிருவாக குழு உறுப்பினர்கள் இதன்போது தெரிவித்தனர்.