யாழ். மானிப்பாயில் தொடரும் அடையாளம் தெரியாதவர்களின் அட்டகாசம்: அச்சத்தில் மக்கள்

Report Print Thamilin Tholan in சமூகம்

யாழ். மானிப்பாயில் இரு இடங்களில் நேற்றைய தினம் வாள்களுடன் வந்த அடையாளம் தெரியாத குழுக்களின் அட்டகாசங்கள் பதிவாகியுள்ளன.

அந்த வகையில் மோட்டார் சைக்கிளில் வந்த மூவர் மானிப்பாய் இந்துக் கல்லூரிக் முன்பாக இருந்த வர்த்தக நிலையங்களை சேதப்படுத்தியுள்ளனர்.

அத்துடன், அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டியொன்றை சேதப்படுத்தியுள்ளனர். சம்பவத்தையடுத்து வர்த்தகர்கள், அப்பகுதி மக்கள் அனைவரும் தம்மை பாதுகாத்துக் கொள்வதற்காக அப்பகுதியிலிருந்து ஓடியுள்ளனர்.

இதேவேளை, மானிப்பாய் - செல்லமுத்து வீதியிலுள்ள வீடொன்றிட்குள்ளும் வாள்களுடன் வந்த அடையாளம் தெரியாத குழுவினர் நுழைந்து அட்டகாசம் புரிந்துள்ளனர்.

குறித்த குழுவினர் வருவதை அறிந்து வீட்டிலுள்ளவர்கள் நுழைவாயில் கதவை அடைத்த நிலையில், அந்த குழுவினர் கதவை சேதப்படுத்தி வீட்டிற்குள் நுழைந்து அங்கிருந்த பொருட்களையும் சேதப்படுத்திச் சென்றுள்ளனர்.

இந்த நிலையில் அப்பகுதி மக்கள் கூறுகையில், தொடர்ந்தும் மானிப்பாய் பகுதியில் வாள்களுடன் வரும் இனந்தெரியாத குழுவினர் அட்டகாசம் புரிவதாகவும் இதனால் தாம் மிகுந்த அச்சத்துடன் இருப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதேவேளை, சம்பவங்கள் தொடர்பில் மானிப்பாய் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.