சாய்ந்தமருதில் வெள்ள நீர் வடிந்தோட நடவடிக்கை

Report Print Nesan Nesan in சமூகம்

அம்பாறை மாவட்டத்தில் கடந்த ஒரு வாரகாலமாக பெய்த தொடர் மழை காரணமாக சாய்ந்தமருது தோணாவை அண்டிய பிரதேசம் வெள்ளத்தில் மூழ்கியிருந்தது.

பாதைகளும், வீடுகளும் வெள்ள நீரினால் மூழ்கி காணப்பட்டு இருந்ததை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாக சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஐ.எம்.ஹனிபா இன்று தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இது தொடர்பில் கல்முனை மாநகர சபையின் ஆணையாளர் ஐ.லியாக்கத் அலி மற்றும் இலங்கை காணி மீட்டல் அபிவிருத்திக் கூட்டுத்தாபனத்தினர் ஆகியோரின் உடனடி கவனத்திற்கு கொண்டு வந்ததையடுத்து, நேற்று மாலை தோணாவில் ஏற்பட்டுள்ள தடைகளை வெட்டி அகற்றும் பணி முன்னெடுக்கப்பட்டது.

தோணாவின் முகத்துவாரத்தில் இருந்த மணலை வெட்டி அகற்றி வெள்ள நீர் கடலுக்குள் செலுத்தப்பட்டதால் வெள்ளம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.