வெளிநாட்டு பால் மா நிறுவனங்கள் நாட்டை ஆக்கிரமிக்க இடமளிக்காது உள்நாட்டு பால் உற்பத்தியாளர்களை மேம்படுத்த எடுக்க வேண்டிய அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
குழந்தைகளின் பால் மாவுக்கு மானியம் வழங்கும் அதேவேளை வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ஏனைய பால் மாவுக்கு வரையறை விதித்து தேசிய பால் உற்பத்தி துறையை வலுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.
பொலன்நறுவை அரலகங்வில பிரதேசத்தில் இன்று நடைபெற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனை குறிப்பிட்டுள்ளார்.
பால் மா இறக்குமதிக்கு வருடாந்தம் பெருந்தொகை பணம் செலவு செய்யப்படுகிறது.
இது பொருளாதாரத்தில் மோசமான பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. உலகில் அபிவிருத்தியடைந்த எந்த நாடும் வெளிநாடுகளின் பால் மாவினை பயன்படுத்துவதில்லை.
வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யும் பால் மாவை அதிகமாக பயன்படுத்தும் நாடாக இலங்கை மாறியுள்ளது.
இந்த நிலைமையை உடனடியாக மாற்ற வேண்டும் எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.