பாலாவின் கைதுக்கு யாழ். ஊடக அமையம் கடும் கண்டனம்!

Report Print Murali Murali in சமூகம்

ஊடகவியலாளரும் கேலிச்சித்திரக் கலைஞருமான பாலா, தமிழகத்தில் கைது செய்யப்பட்டுள்ளமையை வன்மையாகக் கண்டிக்கின்றோம்” என, யாழ். ஊடக அமையம் தெரிவித்துள்ளது.

குறித்த விடயம் தொடர்பில் யாழ். ஊடக அமையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,

தமிழகத்தின் நெல்லையில், கந்துவட்டிக் கொடுமைக்கு, தீயில் கருகிப் பலியான இசக்கிமுத்து குடும்பம் தொடர்பாக விமர்சன கார்ட்டூன் வரைந்த கார்டூனிஸ்ட் பாலா, சென்னை, போரூர் அருகே, பெரிய பணிச்சேரியில் உள்ள அவரது வீட்டில் வைத்து இன்று பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கார்டூனிஸ்ட் பாலா, கடந்த பல ஆண்டுகளாக குமுதம் வார இதழின் அதிகாரப்பூர்வ கார்டூனிஸ்டாக பணி புரிந்தவர். தற்போது சுயாதீனமான கார்டூனிஸ்டாகப் பணி செய்து வரும் அவர், பல்வேறு பிரச்சினைகளிலும் தன் கருத்தை வலியுறுத்தி, கார்ட்டூன் வரைந்து வருகிறார்.

இலங்கையின் வட, கிழக்கு தமிழர் தாயகத்தில் தென்னிலங்கை அரசாங்கத்தாலும் அதன் துணைப்படைகளாலும் அரச முப்படைகளாலும் கொல்லப்பட்டும் காணாமலும் போயுள்ள 41க்கும் அதிகமான தமிழ் ஊடகவியலாளர்களுக்கு நீதி கோரி, யாழ். ஊடக அமையம் தொடர்ந்து போராடி வருகின்றது.

இந்நிலையில், இலங்கை அரசாங்கத்துக்குக் குறையாது இந்திய அரசாங்கத்தின் கண் முன்னால், ஊடகக் கொலைகளும் கைதுகளும் அரங்கேறத் தொடங்கியுள்ளன.

கௌரி லங்கேஸ், தபோல்கர், கோவிந்த் பன்சாரே, கல்புர்கி என இந்தியா முழுவதும், அரசாங்கத்துக்கு எதிராக கருத்துகளை வெளியிடும் பத்திரிகையாளர்களும், முற்போக்காளர்களும் கொல்லப்பட்டுள்ளனர்.

ஊடக சுதந்திரத்துக்கு குரல் கொடுத்தும் போராடியும் வருகின்றதோர் அமைப்பு என்ற வகையில் இந்தியக் கொலைகளையும் கைதுகளையும் யாழ். ஊடக அமையம் வன்மையாகக் கண்டிக்கின்றது” என்றுள்ளது.

எமது தொப்புள் கொடி உறவுகளது உரிமைக்குரலுக்கு கைகொடுக்கின்றது. அதிலும் பாலாவின் தூரிகைகள் ஈழத்துக்காக பல தடவைகள் அறச் சீற்றத்துடன் எழுந்து குரல் கொடுத்ததை நாம் மறந்து போக தயாராகவில்லை.

கார்ட்டூனிஸ்ட் பாலாவின் மீதான வழக்கை உடனடியாக திரும்பப் பெற்று அவரை விடுவிக்க வேண்டும். மேலும், சட்ட விதிகளை மீறி அராஜகமான முறையில் கைது நடவடிக்கையில் ஈடுபட்ட காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஜனநாயகத்தின் மீதும், மனித உரிமை மீதும், ஊடக சுதந்திரத்தின் மீதும் நம்பிக்கை கொண்டுள்ள தேசமாக இந்திய தேசம் உருவாக யாழ். ஊடக அமையத்தின் கோரிக்கைகள் யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய துணைத் தூதரகம் ஊடாக இந்திய மத்திய அரசாங்கத்துக்கு அனுப்பி வைக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Latest Offers