சவுக்கடி இரட்டைக் கொலைச் சந்தேகநபர்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

Report Print Navoj in சமூகம்

மட்டக்களப்பு - சவுக்கடி இரட்டைக் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களுக்கு எதிராக ஆர்பாட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த ஆர்ப்பாட்டத்தை ஆறுமுகத்தான் குடியிருப்பு, சவுக்கடி பிரதேச பொது மக்கள் இன்று காலை முன்னெடுத்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களுக்கு அதிகூடிய தண்டனை வழங்கக் கோரியும், அவர்களுக்கு ஒருபோதும் பிணை வழங்க கூடாது எனவும், அவர்களுக்கு ஆதரவாக சட்டத்தரணிகள் எவரும் ஆஜராகக் கூடாது எனும் கோரிக்கைகளை முன்வைத்து ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் சட்டத்துறையே கொலையாளிகளுக்குத் தண்டனை வழங்கு, சட்டத்தரணிகளே, கொலையாளிகள் சார்பில் ஆஜராக வேண்டாம், நீதி தேவதையே கண்விழி, காவற்துறையே கொலையாளிகளைப் பிடித்ததது போல் அவர்களுக்கு விரைவாகத் தண்டனையைப் பெற்றுக் கொடுக்க மேலும் உதவுங்கள் போன்ற பதாதைகளை ஏந்தியவண்ணம் கோசங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஏறாவூர் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட சவுக்கடி பிரதேசத்தில் கடந்த மாதம் 18ஆம் திகதி தாய் மற்றும் மகன் இருவர் கொலை செய்யப்பட்டதுடன், வீட்டில் இருந்த நகைகளும் கொள்ளையடிக்கப்பட்டிருந்தன.

இந்த நிலையில், சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்கள் இருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.