மலேசிய சிறையில் உயிரிழந்த இலங்கை தமிழர்

Report Print Steephen Steephen in சமூகம்

மலேசிய சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கையர் ஒருவர் நிமோனியா காய்ச்சலில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கொழும்பு - கொட்டாஞ்சேனை சங்கமித்த மாவத்தையை சேர்ந்த 44 வயதான மகேஸ்வரன் சிங்கராஜா என்ற நபரே உயிரிழந்துள்ளார்.

இவர் கடந்த 7 வருடங்களுக்கு முன்னர் சுற்றுலா வீசாவில் மலேசியாவுக்கு சென்று அங்குள்ள பாடசாலை ஒன்றில் காவலாளியாக தொழில் புரிந்து வந்துள்ளார்.

வீசா அனுமதி காலம் முடிந்த நிலையில் கைது செய்யப்பட்ட இவர் அங்குள்ள சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் அவர் நிமோனியா காய்ச்சலால் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படும் நிலையில் சடலம் நேற்று முன்தினம் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட சடலத்தின் நீர்கொழும்பு வைத்தியசாலையின் சட்டவைத்திய அதிகாரி மருத்துவர் கீர்த்தி சிறிஜயந்த விக்ரமரத்ன பிரேதப் பரிசோதனைகளை நடத்தியுள்ளார். நிமோனியா நோய் காரணமாக இந்த மரணம் சம்பவித்துள்ளதாக மருத்துவர் கூறியுள்ளார்.

அதேவேளை உயிரிழந்த நபரின் மார்பு மற்றும் கால்களில் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டமைக்கான காயங்கள் காணப்படுவதாகவும் சட்டவைத்திய அதிகாரி மேலும் கூறியுள்ளார்.

உயிரிழந்த நபர் கடந்த 7 ஆண்டுகளாக இலங்கையில் வாழும் தமது உறவினர்களுக்கு பணம் எதனையும் அனுப்பவில்லை என தெரியவருகிறது.

அண்மையில் ஒரு நாள் உறவினர்களை தொலைபேசியில் தொடர்புக்கொண்ட உயிரிழந்த நபர் தான் தற்போது 17 இலட்சம் ரூபாவை உழைத்திருப்பதாகவும், அடுத்த சில தினங்களில் கனடாவுக்கு சென்று அதிகமாக பணத்தை சம்பாதிக்க போவதாகவும் கூறியிருந்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.