மட்டக்களப்பில் மதுபானசாலைகளை அகற்ற கோரி போராட்டம்

Report Print Kumar in சமூகம்

மட்டக்களப்பு மாவட்டத்தில் மதுபானசாலைகளை குறைக்கக்கோரியும், ஆரையம்பதியில் உள்ள மதுபானசாலையை அகற்றுமாறு வலியுறுத்தியும் கவன ஈர்ப்பு போராட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த போராட்டம் மண்முனைப்பற்று பிரதேச செயலகத்திற்கு முன்பாக இன்று காலை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன்போது, யுத்ததிற்கு பின்னர் மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகளவான மதுபானசாலைகள் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும், அவற்றினை மட்டுப்படுத்த உயர் அதிகாரிகள் நடவடிக்கையெடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

அத்துடன், ஆரையம்பதியில் இரு மதுபானசாலைகள் சட்ட விரோதமாக இயங்கி வருவதாகவும், சில அதிகாரிகளின் அனுசரணையுடன் அந்த மதுபானசாலைகள் இயங்கி வருவதாகவும் மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

அத்துடன், மதுபாவனைகள் காரணமாக மாவட்டத்தின் கல்வி பாதிப்புக்களை எதிர்கொண்டு வருவதுடன் வறுமை நிலையும் , குடும்ப வன்முறைகளும் அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதனை தொடர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் சத்தியானந்தி நமசிவாயத்திடம் மகஜர் ஒன்றும் கையளித்துள்ளனர்.

இந்த போராட்டத்தில் மகளிர் அமைப்புகள், அரசியல் கட்சிகளின் உறுப்பினர்கள், ஆரையம்பதி பிரதேச பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் உட்பட பலரும் கலந்து கொண்டுள்ளனர்.