கிளிநொச்சியில் தனியாரின் காணியில் குவிந்து கிடக்கும் துணிகளால் மக்கள் அசௌகரியம்

Report Print Suman Suman in சமூகம்

கிளிநொச்சி, அம்பாள்குளம் கிராமத்தில் தனியார் ஒருவரின் காணிக்குள் ஆடைத்தொழிற்சாலை ஒன்றினுடைய கழிவு துணிகளால் அப்பகுதி மக்கள் பெரும் அசௌகரியத்தை எதிர்நோக்குவதாக தெரிவித்துள்ளனர்.

ஆடைத் தொழிற்சாலை ஒன்றின் கழிவு துணிகளை தனிநபர் ஒருவர் கொள்வனவு செய்து அதனை மூலப்பொருளாக பயன்படுத்தி சிறு தொழில் முயற்சி ஒன்றில் ஈடுபட்டு வருகின்றார்.

தான் கொள்வனவு செய்த கழிவு துணிகளை தனது காணியில் வெட்ட வெளியில் அவர் களஞ்சியப்படுத்தியுள்ளார்.

கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக பெருமளவு கழிவு துணிகள் இவ்வாறு குப்பை மேடு போன்று காணப்பட்டு வருகின்றதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

அத்தோடு அண்மையில் பெய்த கடும் மழையின் காரணமாக மேற்படி கழிவுத் துணிகள் அருகில் உள்ள கழிவு வாய்க்கால் நீரில் அடித்துச் செல்லப்பட்டு சுற்றியுள்ள பிரதேசங்களில் பரவி காணப்படுகின்றது.

இதனால் அப்பகுதிகளில் சுகாதார சீர்கேடுகள் ஏற்பட்டுள்ள நிலையில் இந்த விடயம் பொது சுகாதார பரிசோதகரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அவரால் நீதிமன்ற நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.