தொண்டமானின் பெயர் நீக்கப்பட்டமைக்கு தொடர்ந்தும் மலையகத்தில் எதிர்ப்புக்கள்

Report Print Thirumal Thirumal in சமூகம்

ஹட்டன் தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையத்தின் பெயர் மாற்றப்பட்டமை தொடர்பில் நோர்வூட் பொய்ஸ்டன் தோட்ட மக்கள் இன்றைய தினம் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுத்திருந்தனர்.

பொய்ஸ்டன் தோட்ட தொழிற்சாலைக்கு முன்பாக ஒன்று திரண்ட மக்கள் பதாதைகளை ஏந்தியவண்ணம் தமது எதிர்ப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தனர்.

ஹட்டன் தொழிற்பயிற்சி நிலையத்திற்கு இடப்பட்டிருந்த தொண்டமானின் பெயரை அகற்றியமை மலையக மக்களிடத்தில் அண்மைக்காலமாக மனக்கசப்பினை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பில் போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கருத்துத் தெரிவிக்கையில்,

கடந்த அரசாங்க காலப்பகுதியிலிருந்து இந்த நாட்டில் மலையக பிரதேசங்களுக்கு அபிவிருத்தி பணிகள் செய்யும் பொழுது குறிப்பாக மறைந்த தலைவர் சௌமிய மூர்த்தி தொண்டமானின் பெயரில் பல்வேறு கட்டடங்கள் கட்டப்பட்டன.

அப்போதெல்லாம் இருந்த அரசாங்கங்கள் இவரின் பெயரை நீக்குவதில் கவனம் செலுத்தவில்லை. அந்த அளவிற்கு மதிப்பும் மரியாதையும் எமது தலைவருக்கு வழங்கி வந்தனர்.

ஆனால் நல்லாட்சி அரசாங்கம் உருவாகுவதற்கு மலையக மக்கள் மூல காரணமாக இருந்தனர் என நாட்டின் பெருந் தலைவர்கள் பேசிகொண்டு வருகின்றனர்.

இந்த நல்லாட்சி அரசாங்கத்தை உருவாக்குவதற்கும், அவ் அரசாங்க தரப்பினருக்கு வாக்களிக்கவும், வாக்குரிமையை பெற்றுக்கொடுத்தவர் அமரர். தொண்டமான் என்பதை சமீப காலத்தில் மறந்து இந்த ஆட்சியில் உள்ள புதிய தலைவர்கள் மலையக மாற்றம் என கூறிக்கொண்டு மலையக பெருந் தலைவர்களின் பெயர்களை நீக்கி வருகின்றனர்.

இது அரசியல் ரீதியில் மலையகத்தில் வேறுபாட்டை உருவாக்கியுள்ளது. எனவே உடனடியாக அரசாங்க தலைமைகள் தலையீடு செய்து இவ் விவகாரத்திற்கு தக்க தீர்வினை காணும் வகையில் மீண்டும் இவரின் பெயரை உள்வாங்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளனர்.