தாதியொருவரின் செயற்பாடுகளால் இரு நாட்கள் ஸ்தம்பிதமடைந்த வைத்திய சேவை

Report Print Gokulan Gokulan in சமூகம்

தாதியொருவரின் செயற்பாடுகள் காரணமாக லிந்துலை மாவட்ட வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிப்புறக்கணிப்பினால் வைத்திய சேவைகள் இன்று இரண்டாவது நாளாகவும் ஸ்தம்பிதம் அடைந்துள்ளன.

நிர்வாகத்திற்கு இடையூறு விளைவிக்கும் மற்றும் நோயாளர்களை முறையாக கவனிக்காமல் செயற்பட்டு வரும் தாதியொருவரை இடமாற்றக் கோரியே குறித்த பணிப்புறக்கணிப்பு போராட்டம் இரண்டு நாட்களாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த பணிப்புறக்கணிப்பினை லிந்துலை மாவட்ட வைத்தியசாலையின் வைத்தியர்கள் உட்பட அங்கு பணி புரியும் சிற்றூழியர்கள் இணைந்து மேற்கொண்டு வருகின்றனர்.

இது தொடர்பில் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுபவர்கள் தெரிவிக்கையில்,

குறித்த தாதி நிர்வாகத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் ஈடுபடுகின்றமையினால், அவரை இடமாற்றம் செய்யும் வரை நாம் பணியில் ஈடுபட போவதில்லை என குறிப்பிட்டுள்ளனர்.

இதேவேளை மருத்துவ விடுமுறை போராட்டத்தில் 20 பேர் ஈடுட்டுள்ள நிலையில் 7 தாதியர்கள் மாத்திரமே கடமையில் ஈடுபட்டு வருகின்றனர்

இந்த நிலையில் நோயாளர்களின் நலன் கருதி நுவரெலியா மாவட்ட சுகாதார திணைக்களத்தினால் தற்காலிகமாக வைத்தியர் ஒருவர் அனுப்பி வைக்கப்பட்டுள்ள போதிலும் அவசர சிகிச்சை மற்றும் வெளிநோயாளர் பிரிவுகள் மாத்திரமே குறித்த வைத்தியரினால் முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.