கடற்படையினரால் பறிக்கப்பட்டது மீனவரின் மகிழ்ச்சி

Report Print Ashik in சமூகம்

இரணைதீவு மேற்கு கடல் பகுதிக்குச் சென்று மீன் பிடித்த மன்னார் மீனவர் ஒருவருக்கு நேற்றைய தினம் பல இட்சம் ரூபா பெறுமதியான பாரை மீன்கள் பிடிபட்டுள்ளன.

அந்த மீனவர் மிகுந்த மகிழ்ச்சியுடன் கரை திரும்பிய நிலையில், அவரது மகிழ்ச்சியை பறிக்கும் வகையில் குறித்த பாரை மீன்களை கடற்படையினர் இன்று காலை பள்ளிமுனை கடற்கரையில் வைத்து பறிமுதல் செய்துள்ளனர்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

மன்னார், பள்ளிமுனையைச் சேர்ந்த மீனவர் ஒருவர் நேற்று (13) மாலை மீன் பிடிப்பதற்காக பள்ளிமுனை கடற்பகுதியில் இருந்து சக மீனவர்களுடன் மீன்பிடிக்க கடலுக்குச் சென்றுள்ளார்.

இந்த நிலையில் குறித்த மீனவர் இன்று(14) காலை இரணைதீவு மேற்கு கடற்பகுதியில் உள்ள கடற்படை முகாமிற்கு சற்று தொலைவில் மீன்பிடியில் ஈடுபட்ட போது சுமார் 700 கிலோகிராம் பாரை மீன்கள் பிடிபட்டுள்ளன.

இந்த நிலையில் குறித்த மீன்களை பள்ளிமுனை கடற்கரைக்கு இன்று காலை 11 மணியளவில் குறித்த மீனவர் சக மீனவர்களின் உதவியுடன் கொண்டு வந்தபோது பள்ளிமுனை கடற்கரையில் இருந்த கடற்படையினர் மீன்களை கரைக்கு கொண்டு செல்லவதற்கு அனுமதி மறுத்துள்ளனர்.

அத்துடன் குறித்த மீன்கள் டைனமைட் வெடி பொருளை பயன்படுத்தியே பிடிக்கப்பட்டுள்ளதாகவும், தமக்கு இரகசிய தகவல் கிடைத்துள்ளதாகவும் கடற்படையினர் மீனவர்களிடம் தெரிவித்துள்ளனர்.

எனினும் அந்த மீன்கள் இன்று (14) காலை இரணைதீவு மேற்கு கடற்பகுதியில் உள்ள கடற்படை முகாமிற்கு சற்று தொலைவில் சுருக்கு வலையினை பயன்படுத்தியே பிடிக்கப்பட்டுள்ளதாக மீனவர்கள் கடற்படையினரிடம் தெரிவித்ததோடு, சம்பவ இடத்திற்கு வந்த மன்னார் மாவட்ட கடற்தொழில் திணைக்கள அதிகாரிகளுக்க முன் மீன்களை வெட்டி காண்பித்துள்ளனர்.

இருப்பினும், கடற்படையினரால் இடைமறித்து வைக்கப்பட்டிருந்த 700 கிலோகிராம் பாரை மீன்களையும் மன்னார் மாவட்ட கடற்தொழில் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ள நிலையில், கடற்தொழில் திணைக்கள அதிகாரிகள் குறித்த மீன்களை மன்னார் நீதிமன்றத்தில் ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த விடயம் தொடர்பில் கடற்தொழில் திணைக்கள மாவட்ட பணிப்பாளர் மெராண்டாவிடம் தொடர்பு கொண்டு கேட்ட போது,

பள்ளிமுனை கடற்பகுதியில் தடை செய்யப்பட்ட டைனமைட் வெடிபொருட்களை பயன்படுத்தி பிடிக்கப்பட்டதாக கருதி சுமார் 700 கிலோகிராம் மீன்களை பள்ளிமுனை கடற்படையினர் மீட்டு மன்னார் மாவட்ட கடற்தொழில் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மீனவர்களிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு பின் நீதிமன்றத்தில் குறித்த மீன்களின் மாதிரிகள் ஒப்படைக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.