கையூட்டல் குற்றச்சாட்டு வழக்கிலிருந்து பொலிஸ் உத்தியோகத்தர் விடுதலை

Report Print Kamel Kamel in சமூகம்

கையூட்டல் பெற்றுக் கொண்டதாகக் குற்றம் சுமத்தி தாக்கல் செய்யபபட்டிருந்த வழக்கிலிருந்து பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி கிஹான் குலதுங்க இந்த வழக்குத் தொடர்பான தீர்ப்பினை இன்று அறிவித்திருந்தார்.

செல்லிடப்பேசி ஒன்று தொடர்பான முறைப்பாடு ஒன்றுடன் தொடர்புடைய தரப்புகளுக்கு இடையில் இணக்கப்பாட்டை ஏற்படுத்த 20000 ரூபா கையூட்டல் பெற்றுக் கொண்டதாகத் தெரிவித்து, பொலிஸ் உத்தியோகத்தருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த வழக்கை விசாரணை செய்த நீதிமன்றம் பொலிஸ் உத்தியோகத்தர் குற்றமற்றவர் என தீர்ப்பளித்துள்ளது.

முறைப்பாட்டை செய்த பெண்ணும், கையூட்டல் மோசடி தவிர்ப்பு பிரிவின் அதிகாரிகளும் வழங்கிய சாட்சியங்களில் முரண்பாட்டு நிலை காணப்படுவதாக நீதிபதி தெரிவித்துள்ளார்.

பொலிஸ் உத்தியோகத்தர் கையூட்டல் பெற்றுக் கொண்டாரா என்பது குறித்து எழுந்த சந்தேகத்தை தொடர்ந்து அதன், நலனை சந்தேக நபருக்கு வழங்க நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

சம்பவம் இடம்பெற்றதாகக் கூறப்படும் தேனீர் கடையில் பணியாற்றியோர் அளித்த வாக்கு மூலத்தையும் கருத்திற் கொண்டு தீர்ப்பு வழங்குவதாக நீதிபதி தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தங்காலை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய பொலிஸ் உத்தியோகத்தரான ரஜகல்கொட கமகே சுனில் என்பவரே இவ்வாறு விடுவிக்கப்பட்டுள்ளார்.