கிளிநொச்சியில் காலாவதியாகும் நிலையிலுள்ள திரிபோசா விநியோகம்

Report Print Suman Suman in சமூகம்

கிளிநொச்சியில் கர்ப்பிணி தாய்மார்கள் மற்றும் குழந்தைகளுக்கு காலாவதியாகும் நிலையில் உள்ள திரிபோசா விநியோகிக்கப்பட்டுள்ளதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் இந்த பகுதி மக்கள் கருத்து தெரிவிக்கையில்,

குறித்த மாவட்டத்தின் உருத்திரபுரம், சிவநகர், உதயநகர் போன்ற பல கிராமங்களில் காலாவதியாகும் நிலையில் உள்ள திரிபோசா வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், 13.11.2017 அன்று வழங்கப்பட்டுள்ள திரிபோசா பைக்கற்றுகள் 15.11.2017 அன்று காலாவதியாகும் திகதியில் காணப்படுகின்றன.

இது குறித்து சில பெற்றோர்கள் மற்றும் கர்ப்பிணி தாய்மார்கள் கேள்வி எழுப்பிய போதும் அவற்றை கவனத்தில் எடுக்காது, உத்தியோகத்தர்கள் இவை மட்டுமே இருப்பதாகவும், விரும்பினால் பெற்றுக்கொள்ளுங்கள் இல்லையெனில் விட்டுச் செல்லுங்கள் என தெரிவிக்கின்றனர் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

அத்துடன், வறுமை நிலையில் உள்ள பல குடும்பங்கள் வேறு வழியின்றி காலாவதியாகும் திரிபோசாவை பெற்றுச் சென்றுள்ளனர்.

மேலும், இந்த திரிபோசா பைக்கற்றுகள் குறைந்தது இரண்டு வாரங்களுக்கு வைத்து பயன்படுத்தப்படும் என மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.