குற்றப்பணத்திற்கு பதிலாக சமுதாயம் சார் வேலைகள்: திருகோணமலை நீதிமன்றம் உத்தரவு

Report Print Mubarak in சமூகம்

ஜனவரி மாதம் முதல் இன்று வரை 89 நபர்களுக்கு குற்றப்பணத்திற்கு பதிலாக சமூக சேவை செய்வதற்கான கட்டளையை திருகோணமலை நீதிமன்றம் பிறப்பித்துள்ளதாக சமுதாயம் சார் சீர்திருத்த உத்தியோகத்தர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

நீதிமன்றத்தால் வழங்கப்படுகின்ற இரண்டு வருடங்களுக்கு மேற்படாத சிறைத்தண்டனைக்கு பதிலாக வழங்கப்பட்டு வருகின்ற இந்த சமுதாயம் சார் சீர்திருத்த கட்டளை கஞ்சா, கசிப்பு, கோடா, சூது, ஹெரோயின் மற்றும் மதுபோதையில் அநாகரிகமான முறையில் நடந்து கொள்ளல் போன்ற குற்றச்செயல்களுக்காக வழங்கப்படுகின்றன.

ஹெரோயினை தன்வசம் வைத்திருந்த குற்றத்திற்காக திருகோணமலை தலைமையக பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் குற்றத்தை ஒப்புக்கொண்டதையடுத்து, அவருக்கு பத்தாயிரம் ரூபா தண்டம் செலுத்துமாறு திருகோணமலை நீதிமன்ற பிரதம நீதவானால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

குறித்த சந்தேகநபரிடம் தண்டம் செலுத்த பணம் இல்லாதவிடத்து பத்தாயிரம் ரூபா தண்டப்பணத்திற்கு பதிலாக 200 மணித்தியாலங்கள் சமூக சேவை வேலைகளை வழங்குமாறும் நேற்று (14) சமுதாயஞ்சார் சீர்திருத்த பிரிவிற்கு கட்டளையிட்டார்.

இவ்வாறான சந்தர்ப்பத்தில் சமுதாயம் சார் சீர்திருத்த கட்டளை பிறப்பிக்கப்பட்ட 89 பேரில் 27 பேர் தமது கட்டளைகளை நிறைவு செய்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.