குடாநாட்டு வாள்வெட்டு சம்பவங்களுக்கு பின்னணி உண்டா?

Report Print Samy in சமூகம்

யாழ்.குடாநாட்டில் கடந்த சில வாரங்களாகத் தொடர்ந்து இடம்பெறும் வாள்வெட்டுச் சம்பவங்களால் குடாநாட்டு மக்கள் அதிர்ந்து போயுள்ளனர்.

எதற்காக இப்படி நடக்கிறது என்ற கேள்விகள் துளைத்துக் கொண்டே இருக்கின்றன.

எங்கள் இளைஞர்கள் இப்படிச் செய்கின்றார்களா? அல்லது இதற்குப் பின்னணி ஏதும் உண்டா? என்ற விடை தெரியாத வினாக்களுக்கு அப்பால், வாள்வெட்டுக் குழுவின் நோக்கம் என்ன? அவர்கள் இப்படியொரு வேலையைப் பரவலாக ஏன்? செய்கின்றனர் என்பதும் ஆராயப்பட வேண்டும்.

இந்த ஆராய்வின் மூலம் உண்மை நிலை கண்டறியப்படுவது அவசியம். ஏனெனில் சாதாரண இளைஞர்கள் சேர்ந்து வாள்வெட்டுச் சம்பவங்களைப் பரவலாக நடத்துவதும் அதை நடத்தி விட்டுப் பாதுகாப்பாகத் தப்பித்துக் கொள்வதும் சாத்தியமற்றது.

எனவே வாள்வெட்டுச் சம்பவங்களின் பின்னணியில் ஒரு பலமான சக்தி உண்டென்று ஊகிப்பதில் தவறில்லை. நிலைமை இதுவாக இருக்கையில், வாள் வெட்டுச் சம்பவங்களை உடனடியாகக் கட்டுப்படுத்த வேண்டும் என்ற உத்தரவுகளை நீதித்துறையும் பொலிஸ் உயர்மட்டமும் விடுத்து வருகின்றது.

இத்தனை ஆயிரம் பொலிஸார் யாழ்.குடா நாட்டில் கடமையில் இருக்கும்போது வாள் வெட்டுச் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுகின்றன என்றால், எதற்காகப் பொலிஸார் என்ற கேள்வி பொதுமக்களிடம் எழுவதும் அந்தக் கேள்வியை பொதுமக்கள் சார்பில் பொலிஸ் உயர்மட்டம் பொலிஸாரிடம் கேட்பதும் நடைமுறையில் உள்ளது.

இந்நிலையில் வாள்வெட்டுச் சம்பவங்களைக் கட்டுப்படுத்துவதாகக் காட்டும் பொருட்டு பொலி ஸார் பொறுப்பற்ற முறையில் சில இளைஞர்களைக் கைது செய்கின்றனர் என்ற குற்றச்சாட்டு பரவலாக எழுந்துள்ளது.

என்றோ ஒரு தடவை தவறு செய்து விட்டார்கள் என்பதற்காக எடுத்ததற்கெல்லாம் அவர்களையே கைது செய்வதென்பது நியாயமானதாகாது.

இவ்வாறு ஆள் எண்ணிக்கைக்காகக் கைது செய்வதானது; எந்தப் பிரச்சினையும் வேண்டாம் என்றிருப்போரைக் குழப்புவதுடன் குற்றம் இழைத்தவர்கள் தப்பித்துக் கொள்ளவும் வழிவகுக்கும்.

நீதியின் அடிப்படைக் கோட்பாடுகளில் ஒன்று, ஆயிரம் குற்றவாளிகள் தப்பித்துக் கொண்டாலும் ஒரு நிரபராதி தண்டனை பெற்றுவிடக் கூடாது என்பதுதான்.

இந்த அடிப்படை நீதியையும் மாற்றி, குற்ற வாளிகள் தப்பித்துக் கொள்ளவும் கூடாது நிரபராதிகள் தண்டிக்கப்பட்டும் விடக்கூடாது என இன்னும் துலக்கிக் கொள்ளலாம்.

ஆக, வாள்வெட்டுச் சம்பவங்கள் கட்டுப்படுத்தப்பட வேண்டும். அதற்காக அநாவசியக் கைதுகள் ஆள் எண்ணிக்கைக்காக இடம்பெறாமல் இருப்பதிலும் பொலிஸார் அதீத அக்கறை காட்டுவது அவசியம்.

- Valampuri