மட்டக்களப்பில் கவனயீர்ப்பு போராட்டத்தில் மீனவர்கள்

Report Print Kumar in சமூகம்

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள மீனவர்களின் உரிமைகளை பாதுகாக்க கோரியும், மீனவர்களின் தேவைகளை நிறைவேற்றுமாறு கோரியும் மட்டக்களப்பில் கவனஈர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

சர்வதேச மீனவர் தினத்தினை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்ட கடற்தொழிலாளர்கள் அமைப்புகள் மற்றும் மீனவர் அமைப்புகள், பொது அமைப்புகள் இணைந்து இன்று குறித்த கவனயீர்ப்பு போராட்டத்தை மேற்கொண்டுள்ளன.

இதன்போது கருத்து தெரிவித்த மீனவர்கள்,

கடலில் தொழில் செய்யும் மீனவர்கள் பல்வேறு கஷ்டங்களை எதிர்கொண்டு வருகின்றனர். அவர்களுக்கான உதவி திட்டங்கள் மிகவும் குறைவான நிலையிலேயே கிடைக்கின்றன. இந்த உதவி திட்டங்களை நல்லாட்சி அரசாங்கம் அதிகரிக்க வேண்டும்.

கார்த்திகை, மார்கழி மற்றும் தை மாதங்களில் இயற்கை சீற்றமான காலத்தில் கடலுக்கு தொழிலுக்கு செல்ல முடியாத நிலை மீனவர்களுக்கு ஏற்படுகின்றன. இந்த காலப்பகுதியில் மீனவர்களின் குடும்பம் மிகவும் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.

வறட்சி காலத்தில் விவசாயிகளுக்கு பல்வேறு நிவாரணங்கள் வழங்கப்படும் நிலையில் மீனவர்களுக்கு இடர் ஏற்படும் காலத்தில் எந்த நிவாரணங்களும் வழங்கப்படுதில்லை.

அத்துடன், கடற்கரையை அண்டியுள்ள பகுதிகள் பெருமளவில் சுற்றுலாத்துறைக்கு வழங்கப்படுவதனால் நாங்கள் தொழில் செய்யமுடியாத நிலையேற்படுகின்றது.

மட்டக்களப்பு முகத்துவாரம் ஊடாக மீன்பிடியில் ஈடுபடுவோர் நவம்பர், டிசம்பர் மாதங்களில் தொடர்ச்சியாக உயிரிழப்புகளை சந்தித்து வருகின்றனர். அவர்களுக்கான எந்த உதவிகளும் வழங்கப்படுவதில்லை.

சட்டவிரோதமான முறையில் வெளியிடங்களில் இருந்துவரும் மீனவர்கள் தமது கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபடுவது தொடர்பில் இதுவரையில் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை.

எனவே, எமது பிரச்சினைகளை கவனத்தில்கொண்டு நல்லாட்சி அரசாங்கம் தங்களுக்கான திட்டங்களை வகுக்க முன்வர வேண்டும் என குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், போராட்டத்தின் போது, மட்டக்களப்பு மாவட்ட அரசார்பற்ற அமைப்புகளின் ஒன்றியமான இணையத்தின் தலைவர் எஸ்.சிவயோகநாதனிடம் தங்களது கோரிக்கைகள் அடங்கிய மகஜர் ஒன்றையும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கையளித்துள்ளனர்.

Latest Offers