தேசியக் கொடி விவகாரம்: வடமாகாண சபை உறுப்பினர் கவலை

Report Print Thamilin Tholan in சமூகம்

இலங்கையின் தேசியக் கொடி ஏற்றாமல் யாழ். உடுப்பிட்டி அமெரிக்கன் மிஷன் கல்லூரியின் புதிய அதிபர் விடுதித் திறப்பு விழாவினை ஆரம்பித்தமை தமக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளதாக சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் வட மாகாணசபை உறுப்பினர் சிவக்கொழுந்து அகிலதாஸ் தெரிவித்துள்ளார்.

யாழ். வல்வெட்டித்துறை உடுப்பிட்டி அமெரிக்கன் மிஷன் கல்லூரியின் புதிய அதிபர் விடுதித் திறப்பு விழா இன்று காலை-09 மணிக்கு இடம்பெற்றது.

இந்த விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

இந்த விழாவில் விருந்தினர்கள் பாண்ட் வாத்தியத்துடன் அழைத்து வரப்பட்டுப் புதிய கட்டடம் திறந்து வைக்கப்பட்ட போதும் தேசியக் கொடி, பாடசாலைக் கொடி, மாகாணசபைக் கொடி ஆகிய கொடிகளை ஏன் ஏற்றவில்லை? இதற்கான காரணம் தான் என்ன?

ஏதோவொரு காரணமில்லாமல் இவ்வாறு இடம்பெற்றிருக்க முடியாது. இது மிகவும் தவறான விடயம். வடமாகாண சபை ஆட்சிக்கு வந்து மூன்றரை ஆண்டுகள் கடந்துள்ள போதும் வடமாகாணப் பாடசாலைகளில் ஐந்து வீதமான பாடசாலைகளில் இன்னமும் மாகாணசபைக் கொடிகள் இல்லாமலிருப்பது துரதிஷ்டவசமானது.

போராடிப் பெற்றுக் கொண்ட எமது மாகாணசபை அரசின் கொடி கூட பல பாடசாலைகளில் பறக்க விடப்படுவதில்லை எனவும் அவர் விசனம் வெளியிட்டார்.

இதேவேளை, அண்மையில் வவுனியாவிலுள்ள பாடசாலையொன்றில் இடம்பெற்ற விழாவின் போது பிரதம விருந்தினராகக் கலந்து கொண்ட வடமாகாணக் கல்வியமைச்சர் இலங்கையின் தேசியக் கொடியை ஏற்ற மறுப்புத் தெரிவித்திருந்தார்.

இந்தச் செயற்பாடு தொடர்பில் அரசியல் தளத்தில் பல்வேறு கருத்துக்கள் வெளியிடப்பட்டு வருகின்றமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.