பெண்களின் வாழ்தாரத்தை மேம்படுத்துகின்ற போது தான் வறுமை குறையும்

Report Print Rusath in சமூகம்

பதவியிலிருந்த போது வாழ்வாதாரங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியுதவியினால் முற்றுமுழுதாக மக்களின் வாழ்தாரத் தேவையினைப் பூர்த்தி செய்துவிட முடியாது என முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் மார்க்கண்டு நடராசா தெரிவித்துள்ளார்.

ஆனாலும் எமது உதவிகளை வைத்துக் கொண்டு பயனடைந்த மக்கள் சிறிதளவேனும் அவர்களது வருமானத்தை ஈட்டிக்கொள்ள முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மாகாண சபை உறுப்பினராக இருந்த போது வாழ்வாதாரத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட பொருட்கள் பயனாளிகளிடம் கையளிக்கும் நிகழ்வு மண்முனை தென்மேற்கு பிரதேச செயலகத்தின் கேட்போர் கூடத்தில் பிரதேச செயலாளர் தெட்சணகௌரி தினேஸ் தலைமையில் இன்று நடைபெற்றுள்ளது.

குறித்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு கூறியுள்ளார்.

தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில்,

மட்டக்களப்பு மாவட்டம் மதுபோதையிலும், வறுமையிலும் முன்னணியில் இருக்கின்றது. இந்த வருடம் நான் மட்டக்களப்பு மாவட்டத்தில் 65 இற்கு மேற்பட்ட பெண்களுக்கு நவீன முறையிலான தையல் இயந்திரங்களை வழங்கியுள்ளேன்.

எனவே பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துகின்ற போதுதான் நமது மாவட்டத்திலுள்ள வறுமையும் குறைந்து கொண்டு செல்லும்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அபிவிருத்திக்காக போகவில்லை, மாறாக எமது மக்களின் விடுதலைகள், மக்களின் அபிலாசைகள் போன்றவற்றில்தான் நாம் கூடிய பங்களிப்புக்களைச் செலுத்தி வருகின்றோம்.

எமது ஒதுக்கீடுகளில் மக்களின் வாழ்வாதாரங்களுக்கும், ஏனைய செயற்பாடுகளுக்கும் முடிந்தவரை மேற்கொண்டு வருகின்றோம். அபிவிருத்தியைவிட எமது உரிமை முக்கியம் என்று தான் எமது மக்களும் கடந்த காலங்களிலிருந்து செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.

ஆனாலும் அரசியல் சூழ்நிலைகள் மாற்றப்பட்டதன் காரணத்தினால் கடந்த கிழக்கு மாகாண ஆட்சியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் பங்காளியாக இருந்தது என குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது, மண்முனை தென்மேற்கு பிரதேசத்தைச் சேர்ந்த 3 யுவதிகளுக்கு நவீன முறையிலான தையல் இயந்திரங்களும், வறுமைக்கோட்டுக்குட்பட்ட ஒரு மாணவனின் கற்றலுக்கு துவிச்சக்கர வண்டியும் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

மேலும், நிகழ்வில் பிரதேச செயலக சமூகசேவை உத்தியோகஸ்த்தர் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.