துப்பாக்கிச் சூடு நடத்தியது நாங்களே! பகிரங்கமாக ஒப்புக்கொண்ட கடலோரக் காவல்படை

Report Print Murali Murali in சமூகம்

இராமேஸ்வரம் மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியது நாங்கள்தான் என இந்திய கடலோரக் காவல்படை கமாண்டர் ராமாராவ் பகிரங்கமாக ஒப்புக் கொண்டுள்ளார்.

இராமேஸ்வரம் மீனவர்கள் ஹிந்தி அல்லது ஆங்கிலம் பேசவில்லை என்ற காரணத்தை கூறி கடலோர காவல்படையினர் அண்மையில் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

இதில் அந்தோணி பிச்சை, ஜான்சன் என்ற 2 மீனவர்கள் படுகாயமடைந்தனர். இந்த சம்பவம் பாரிய சர்ச்சைகளை ஏற்படுத்தியிருந்தது.

கடந்த காலங்களில் தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தாக்குதல் நடத்தியதாகவும், துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவங்களுமே பதிவாகியிருந்தன.

எனினும், அண்மையில் இந்திய கடலோர காவல்படையினர் தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியிருந்தமை பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

குறித்த சம்பவம் தொடர்பில் கருத்து வெளியிட்டிருந்த மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், மீனவர்களை சுட்ட குண்டு யாருடையது என தெரியாது என கூறியிருந்தார்.

தமிழக அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனும் நிர்மலா சீதாராமன் சொல்வது சரியே என கூறியிருந்தார். இந்நிலையில் கடலோரக் காவல்படை கமாண்டர் ராமாராவ் தங்கச்சிமடத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது,

இராமேஸ்வரம் மீனவர்களை சுட்டது கடலோர காவல்படைதான். மீனவர்களால் மீட்கப்பட்ட 0.22 குண்டு கடலோர காவல்படைக்கு சொந்தமானதே. துப்பாக்கிச் சூடு நடத்திய அபாக்கா கப்பல் சென்னையைச் சேர்ந்தது.

நடுக்கடலில் என்ன நடந்தது என்பது தெரியவில்லை. விசைப்படகை மீனவர்கள் நிறுத்தாமல் சென்றதால் துரத்தி துப்பாக்கிச் சூடு நடத்தியிருந்திருக்கலாம். இது தொடர்பாக சென்னையில் விசாரணை நடைபெற்று வருகிறது.

இரப்பர் குண்டு என கருத்தில் கொண்டு கடலோர காவல்படைக்குச் சொந்தமானது இல்லை என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கருத்து தெரிவித்திருக்கலாம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.