மூன்றாவது தடவையாகவும் பொது மக்களால் நிறுத்தப்பட்ட ஞானவைரவர் காணி அளவீடு

Report Print Suman Suman in சமூகம்

கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலக பிரிவில் தொண்டமான் நகர் கிராமத்தில் உதிரவேங்கை வைரவர் ஆலயத்திற்குச் சொந்தமான ஞானவைரவர் விளையாட்டுக் கழகம் பயன்படுத்தும் காணியினை தனியார் ஒருவருக்கு வழங்கும் நோக்குடன் நில அளவை மேற்கொள்ளும் முயற்சி மூன்றாவது தடவையாகவும் பொது மக்களின் எதிர்ப்பினால் நிறுத்தப்பட்டுள்ளது.

குறித்த பகுதிக்கு கரைச்சி பிரதேச செயலக காணி உத்தியோகத்தர், இன்றைய தினம்(21) காலை நில அளவை செய்வதற்கு சென்ற போது ஒன்று திண்ட பொது மக்கள் தடுத்து நிறுத்தியதோடு, தங்களின் ஆட்சேபனையும் எழுத்தும் மூலம் அதிகாரிகளிடம் கையளித்துள்ளனர்.

இந்த காணியானது, கிளிநொச்சி நகரில் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு முன்பாக ஏ9 பிரதான வீதியில் அமைந்துள்ள பெறுமதிமிக்க காணியாகும்.

தங்களது காணி என தனிநபர் ஒருவர் உரிமை கோரி வருகின்றனர். அவருக்கு காணியினை வழங்கும் நோக்குடன் இதற்கு முன்னரும் இரண்டு தடவைகள் நில அளவீடு செய்ய முற்பட்ட போது எங்களால் தடுத்து நிறுத்தப்பட்டது.

இன்று மூன்றாவது தடவையாகும் நில அளவீடு செய்ய சமூகம் தந்துள்ளனர். இதனை எங்களால் அனுமதிக்க முடியாது என பிரதேச பொது மக்கள் கருத்து கூறியுள்ளனர்.

அத்தோடு வடக்கு மாகாண முதலமைச்சர் இந்தக் காணிக்குரிய ஆவணத்தை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கிளிநொச்சி மாவட்ட அரச அதிபருக்கு அறிவித்தல் வழங்கிய போதும் மாவட்டத்தில் உள்ள அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் பொது மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.