வரிப்புலி சீருடை அணிந்தவரின் புகைப்படம் மாவீரர் வணக்க நிகழ்வில்

Report Print Mohan Mohan in சமூகம்

மாவீரர் வணக்க நிகழ்வு ஒன்றில் விடுதலைப் புலிகளின் நியமச் சீருடை அணிந்து எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றுடன் தாய் ஒருவர் கலந்து கொண்டுள்ளதாக தெரிவிக்கபடுகின்றது.

முல்லைத்தீவில் நேற்று மாவீரர் பெற்றோர் கௌரவிப்பு நிகழ்வு நடைபெற்றுள்ளது. இதன்போது மாவீரர்களின் திருவுருவப் படங்கள் வைத்து வணக்கம் செலுத்தப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில் மாவீரர்களின் திருவுருவப்படங்களுடன் குறித்த படத்தை வைப்பதற்காக அங்கு கொண்டு சென்றதாக இந்த தாய் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் மக்களின் விடுதலைக்காக போராடிய தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் இலங்கை அரசினால் தொடர்ந்தும் தடைசெய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அந்த தாய் விடுதலைப்புலிகளின் நியமச்சீருடை அணிந்து எடுக்கப்பட்ட புகைப்படத்துடன் அங்கு சென்றுள்ளார். இது தொடர்பில் அவரிடம் வினவிய போது அவர் கருத்து தெரிவிக்கையில்,

எனது மகன் போர்க்களத்தில் வீரமரணமடைந்த போது அவருடைய சடலத்துடன் புலிக்கொடி ஒன்றும் புகைப்படம் ஒன்றும் எனக்கு வழங்கப்பட்டது.

கடந்த 2009ஆம் ஆண்டு எனது சகல உடமைகளும் யுத்தத்தினால் அழிக்கப்பட்டன. எனினும் எனது மகனின் இந்தப்படத்தை மட்டுமே என்னால் பாதுகாக்க முடிந்தது.

மேலும், இந்த புகைப்படத்தில் எனது மகன் அணிந்திருக்கும் வரி உடையை எவராலும் தடை செய்ய முடியும் ஆனால் எனது மகனின் முகத்தையும், முகவரியையும் தடுக்கும் உரிமை எவருக்கும் இல்லை என குறிப்பிட்டுள்ளார்.