இருள் நிறைந்த எதிர்காலத்தை நோக்கி இளைஞர் சமுதாயம்!

Report Print Samy in சமூகம்

இன்றைய இளைஞர்களில் பலர் சுயநலத்தை மாத்திரம் கருத்திற் கொண்டு நாட்டின் எதிர்காலத்தை புறந்தள்ளி விடுகிறார்கள்.

தொழில்நுட்ப சாதனங்களுடன் பின்னிப்பிணைந்து நவநாகரிகம் என்ற போர்வையில் தமது எதிர்காலத்தையும் இயற்கையையும் சீரழிக்கும் விடயங்களில் ஈடுபடுகிறார்கள்.

போதை ஒரு மருந்துமல்ல,ஊட்டச்சத்துகள் நிறைந்த ஒரு உணவும் அல்ல. அதை அருந்துவதால் இளைஞர்களுக்கும், அவன் வாழும் சமுதாயத்துக்கும், நாட்டுக்கும் ஏற்படும் தீங்குகள் எண்ணிலடங்காதவை.

போதைவஸ்துக்கு அடிமையாகும் இளைஞர்கள் தமது வாழ்க்கையையே அழித்துக் கொள்கிறார்கள்.

அடுத்த கட்டமாக விஞ்ஞான வளர்ச்சியில் உள்ளடங்குகின்ற தொலைத்தொடர்பு சாதனங்களில் ஒன்றுதான் கையடக்கத் தொலைபேசி ஆகும்.

இளவட்டத்தினரின் தவறான பாவனைகளால் அனைவருக்கும் அசௌகரியங்களை ஏற்படுத்துவதோடு வதந்திகள் பரவுவதற்கும் இவை காரணங்களாக அமைகின்றன. பிரதானமாக இணையத்தைக் குறிப்பிடலாம்.

இவ்வாறு கையடக்கத் தொலைபேசியில் புதிய தொழில்நுட்பங்கள் உட்செலுத்தப்பட்டிருந்தாலும் கூட அதனை இளைஞர்கள் சரியான பாதையில் பயன்படுத்துவதிலும் பார்க்க பிழையான பாதையில் பயன்படுத்துவது அதிகம்.

சமூக விழுமியத்தைப் பேண வேண்டிய சமூக இணையத்தளங்கள் பொறுப்பற்று வீண் வேடிக்கையிலும் விபரீதங்களிலுமே இட்டுச் செல்கின்றன.

இணையத்தளத்தினூடாக ஆபாசப்படங்கள் போன்ற தீய விடயங்கள் இளைஞர்களின் மனதில் விதைக்கப்படுகின்றன.

இவ்வாறு பல்வேறு செயல்களினால் இளைஞர்கள் தங்கள் எதிர்காலத்தை மண்ணோடு மண்ணாக்குகின்றனர். படிப்பை பாதியில் நிறுத்தி விட்டு சுற்றித் திரிகின்றனர்.

படிக்க வேண்டிய பருவத்தையும் காலத்தையும் பாழாக்கிவிட்டு பின்னர் ஏங்குகின்றனர். பின்னர் பெற்றோரின் பணத்தை வீணான பாதையில் செலவிடுகின்றனர். இவ்வாறான பல முறையற்ற செயற்பாடுகளில் தற்கால இளைஞர்கள் பலர் மூழ்கியுள்ளனர்.

நல்ல குடிமக்களாகவும் நாட்டை வழிநடத்தும் நல்ல தலைவர்களாகவும் நாட்டின் நலனை கருத்திற் கொண்டு செயற்பட வேண்டிய இளைஞர்கள் இவ்வாறான செயல்களில் ஈடுபடுவது மனதை உருக்கும் விடயமாகும்.

இவ்வாறான இளைஞர்களை நல்ல வழியில் இட்டுச் செல்லும் பாரிய பொறுப்பு பெற்றோரையும் நாட்டு மக்களையும் பெரிதும் சார்ந்துள்ளது.

இளைஞர்களை அழிக்கின்ற செயல்களில் இருந்து அவர்களை மீட்டெடுக்கவே அரசும் சமூகத் தொண்டு நிறுவனங்களும் ஊடகங்களும் பாடுபட்டு வருகின்றன.

உலகளாவிய ரீதியிலும் கூட பல செயற்றிட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. வெகுசனத் தொடர்பு சாதனங்கள் மூலமும் துண்டுப்பிரசுரம் சுவரொட்டி போன்றவற்றின் வாயிலாக போதையின் போலித்தன்மை உணரச் செய்யப்படுகிறது.

இளைஞர்களின் விளையாட்டுத் திறனைப் பார்க்கையில் இலங்கைத் திருநாடு அவ்வளவு சோபிக்கவில்லை. ஏனெனில் விளையாட்டுத் துறையில் ஈடுபட்டால் வாழ்க்கையில் வெற்றிப்படியை நோக்கி முன்னேற முடியாது என்ற பிரமைதான்.

அவ்வாறல்ல... ஒவ்வொரு வழியிலும் சாதனை உள்ளது. திறமைகளுக்கு முக்கியத்துவம் அளிப்பதும் எத்துறையாயினும் அத்துறை மதிக்கப்படுவதும் எமது நாட்டில் புதுமையான ஒன்றல்ல.

இவ்வாறானதொரு நாட்டில் வாழ்ந்து கொண்டு தமது திறமைகளை ஒடுக்குவது இளைஞர்களுக்கு முறையானதல்ல. விளையாட்டுத்துறையிலும் இலங்கை இளைஞர்கள் பங்குபற்ற வேண்டும்.

சாதனைகளை நிலைநாட்டி நாட்டை பெருமைப்படுத்த வேண்டும்.இளைஞர்களின் நலனை கருத்திற் கொண்டே இலங்கை அரசு இளைஞர் பாராளுமன்றத்தை நிறுவியது.

இளைஞர்களின் பிரச்சினைகள் இளைஞர் பாராளுமன்றங்களில் அதன் உறுப்பினர்களால் சமர்ப்பிக்கப்பட்டு அமைச்சால் சீர்செய்யப்படுகிறது. ஆனால் இன்று இளைஞர்கள் தமது திறமைகளை தாமே மழுங்கடிக்கின்றனர்.

ஒருவித பயம், கூச்சம் போன்றவற்றால் இளைஞர்கள் தமது திறமைகளை உலகுக்குக் காட்ட பின்வாங்குகின்றனர். இலை மறை காய்களாக' இருக்கும் இளைஞர்களின் திறமை எத்துறையாயினும் அத்துறை வெளிக்காட்டப்பட வேண்டும்.

இளைஞர்களின் நலனுக்காகத்தான் ஐக்கிய நாடுகள் சபையினால் 'இளைஞர் தினம்' என ஒரு நாளை பிரகடனம் செய்ய ஆலோசித்து வருகின்றனர். அதற்கு எமது ஜனாதிபதியும் ஆதரவு நல்கியுள்ளார்.

இவ்வாறு இளைஞர் தினமே அனுஷ்டிக்கும் அளவுக்கு இளைஞர்களை, இளைஞர்களின் கருத்துக்களை உலகம் எந்தளவு மதிக்கின்றது என்பது நன்கு புலப்படுகிறது.

இவ்வாறான பல நடவடிக்கைகளை அரசும் சமூகத்தொண்டு நிறுவனங்களும் மேற்கொள்கின்றன என்றால் இன்றைய இளைஞர்களின் எதிர்காலம் பொலிவுற வேண்டும் என்பதற்காகத்தான்.

இலங்கை அரசானது இளைஞர்களுக்கென 'இளைஞர் விவகார அமைச்சு' எனும் அமைச்சையும் நிறுவி அவ்வமைச்சின் கீழ் ஸ்ரீலங்கா யூத் (sri lanka Youth) என்ற அமைப்பையும் நிறுவியுள்ளது.

அவ்வமைப்பினால் இளைஞர்களின் விளையாட்டு, கலை, இலக்கியம் போன்ற பற்பல திறமைகளை வெளிக்கொணர்ந்து அவர்களை ஊக்குவித்து அவர்களுக்கு பணப்பரிசில்களையும் வழங்கி கௌரவிக்கிறது. இச்செயன்முறை வருடாவருடம் நடைபெறுகிறது.

இலங்கை அரசு இளைஞர்களின் தொழில் வாய்ப்பை அதிகரிக்க வேண்டுமென எண்ணி, இலங்கைத் தொழிற்பயிற்சி அதிகாரசபை மூலம் NVQ, DIPLOMA போன்ற பாடநெறிகளை வழங்கி தொழில்வாய்ப்பை ஊக்குவிக்கிறது.

ஆனால் சில இளைஞர்கள் இவை அனைத்தையும் புறந்தள்ளி விடுகிறார்கள். இவ்வாறான நடவடிக்கைகளையும் அரசு மேற்கொள்வது அவர்களின் வெற்றிக்கு உரம் போடுவதற்காகத்தான்.

உலக நாடுகள் வரிசையில் எமது நாடு பல்வேறு சிறப்புக்களோடு திகழுமிடத்தில் இவ்வாறான இளைஞர்களின் செயற்பாடுகளினால் நாட்டின் சிறப்புக்கள் பெருமைகள் மழுங்கடிக்கப்படுகிறன்றன.

இளைஞர்களின் எதிர்காலம் புதைகுழியில் புதைக்கப்படுகின்றது. எமது நாட்டில் இயற்கைவளங்கள் காணப்பட்டாலும் அபிவிருத்தியில் பின்னடைவான நிலையிலேயேயுள்ளது.

இன்றைய எமது நாட்டின் பொருளாதார நிலை மிகவும் குன்றிப்போய் காணப்படுகிறது. அந்நிய செலாவணி குறைவடைந்து பணவீக்கம் அதிகரித்துள்ளது.

அதுமட்டுமல்லாது இலங்கை கடன் எனும் பெரும் பொறிக்குள் சிக்கித் தவிக்கிறது.முன்னைய ஆட்சியாளர்கள் பெற்றுக் கொண்ட கடனை மீளச்செலுத்த வேண்டிய நிலையில் இன்றைய அரசு உள்ளது.

இன்றைய இலங்கையின் கடனை அடைக்க வேண்டுமெனில் சாதாரணமாக இலங்கைக் குடிமகன் ஒருவன் இரண்டு இலட்சம் ரூபாவை வழங்க வேண்டிய இக்கட்டான நிலையில் உள்ளது.

இக்கடன்களை செலுத்தாவிடின் நெருக்கடிகள் அதிகரிக்கம். அது நாட்டுக்கும் மக்களுக்கும் மிகவும் பாதகமான நிலையாகும்.ஆகவே இது பற்றி இல்கையில் பிறந்த ஒவ்வொரு இளைஞனும் சிந்திக்க வேண்டும்.

தொழில் இன்றி காலத்தை வீணாக்காமல் தனிநபர் வணிகத்தையோ, கைத்தொழில் சிறு வணிக முயற்சியையோ, சிறு தொழிற்சாலைகளையோ ஆரம்பித்து உள்ளூர் வணிகத்தை பெருக்க வேண்டும்.

இதுவே பின்னர் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு வித்திடும் என்பதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை.

இளைஞர்களின் பொடுபோக்குத் தன்மையும் கல்வி மீதான ஆர்வற்ற செயற்பாடுகளும் மேலும் தொடருவது நல்லதல்ல.

இளைஞர்கள் கல்வி அறிவின்றி 21 ஆம் நூற்றாண்டில் கூட பின்தங்கி வாழ்வது சிறந்ததல்ல.

இதனால் எமது நாடு ஆசியாக் கண்டத்திலுள்ள நாடுகளின் வரிசையில் கல்வியறிவு மட்டத்தில் வீழ்ச்சியை எதிர்நோக்குகிறது.

இது நாட்டுக்கு அபகீர்த்தியை உண்டாக்கும்.நாட்டில் வறுமையை ஒழிப்பதற்கு பல செயற்றிட்டங்களை மேற்கொண்டு நாட்டை அபிவிருத்திப்பாதையை நோக்கி வீறுநடை போடவைப்பது ஒவ்வொரு இளைஞனினதும் பாரிய பொறுப்பாகும்.

இதைவிட்டு இன்றைய இளைஞர்கள் களியாட்டங்களிலும் வேடிக்கைகளிலும் ஈடுபட்டு வருவது முறையானதல்ல.

இன்றைய இளைஞர்கள் நாட்டின் வருங்காலத் தலைவர்கள். நல்ல குடிமக்களாகவும் நாட்டை வழிநடத்தும் நல்ல தலைவர்களாகவும் அவர்கள் மலர வேண்டும்.

நாட்டின் நலனைக் கருத்திற் கொண்டு இன்றைய இழிநிலைகளைப் போக்கிட அவர்கள் உறுதிபூண வேண்டும்.இளைஞர்களினது சக்தி மகத்தானது.

நாட்டின் வளர்ச்சிக்கு அவர்களின் சக்தி பயன்பட வேண்டும். நாட்டில் காலத்துக்குக் காலம் ஏற்படும் மாற்றங்களை மனதிற் கொண்டு ஆக்கபூர்வமான வழியில் இளைஞர்கள் தம் சக்தியை பயன்படுத்திட வேண்டும்.'

என்னிடம் நூறு இளைஞர்களைக் கொடுங்கள். நான் வலிமையான பாரதத்தை உருவாக்கிக் காட்டுகிறேன்' என்றார் சுவாமி விவேகானந்தர்.

அவரது இக்கூற்று இளைஞர்கள் மீது அவர் கொண்டிருந்த அசைக்க முடியாத நம்பிக்கையையே பிரதிபலித்துக் காட்டுகிறது.

இளைஞர்கள் நாட்டின் ஒற்றுமையைப் பேணவும், வேற்றுமைகளை களையவும் தங்களை தியாகம் செய்யத் தயாராக இருக்க வேண்டும்.

thinakaran.lk