வடமாகாண சுகாதார அமைச்சருக்கும், சுகாதார சாரதிகளுக்கும் இடையில் விசேட சந்திப்பு

Report Print Ashik in சமூகம்

வடமாகாணத்தில் உள்ள சுகாதார சாரதிகள் சங்கத்தினருக்கும், வடமாகாண சுகாதார அமைச்சர் ஜீ.குணசீலனுக்கும் இடையில் விசேட சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இந்த சந்திப்பு, மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் கேட்போர் கூடத்தில் இன்றைய தினம்(25) நடைபெற்றுள்ளது.

வடமாகாணத்தில் உள்ள 5 மாவட்டங்களையும் சேர்ந்த சுகாதார சாரதிகள், சங்க பிரதிநிதிகள் குறித்த கலந்துரையாடலில் கலந்து கொண்டிருந்தனர்.

கலந்துரையாடலின் போது, தற்போது கடமையாற்றுகின்ற சுகாதார சாரதிகளை சுகாதார திணைக்களத்தினுள் நிரந்தரமாக உள்ளீர்ப்பது தொடர்பில் அமைச்சருடன் விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது.

இவ்விடயம் தொடர்பாக வடக்கு சுகாதார அமைச்சர் ஜீ.குணசீலனிடம் வினவிய போது,

வடமாகாணத்தில் சுகாதார திணைக்களத்தில் கடமையாற்றுகின்ற சாரதிகள் இன்று(25) காலை என்னை சந்தித்து தாம் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடினர்.

அவர்கள் தமது சேவையினை சுகாதார திணைக்களத்தினுள் நிரந்தரமாக மட்டுப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையினை முன் வைத்திருந்தார்கள்.

ஏற்கனவே இந்த விடயம் மாகாண மட்டத்தில் முதலமைச்சர் மற்றும் பிரதம செயலாளர் மட்டத்தில் கலந்தாலோசிக்கப்பட்டு தற்காலிகமாக சுகாதார திணைக்களத்தினுள் இருக்கின்ற சாரதிகள் ஏனைய திணைக்களங்களுக்கு இடமாற்றம் செய்யப்படுவது நிறுத்தப்பட்டிருந்தது.

எனினும், அதனை நிரந்தரமாக செய்வதற்கான வழிவகைகள் என்ன, அதனை நிறைவேற்றுவதற்கு என்ன செய்ய வேண்டும் என்பது தொடர்பில் முதலமைச்சருடனும் கலந்துரையாடவுள்ளதாகவும் வடக்கு சுகாதார அமைச்சர் ஜீ.குணசீலன் குறிப்பிட்டுள்ளார்.