இளைஞரொருவரை தாக்கிய சந்தேகநபருக்கு விளக்கமறியல்

Report Print Mubarak in சமூகம்

திருகோணமலை துறைமுக பகுதியில் இளைஞரொருவரை பொல்லால் தாக்கி காயப்படுத்திய சந்தேகநபரை எதிர்வரும் 11ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

இது தொடர்பான வழக்கு நேற்றைய தினம் திருகோணமலை நீதிமன்ற பதில் நீதிவான் ஏ.எம்.முஹித் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன்போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் பற்றிமா வீதி, திருகோணமலை பகுதியைச் சேர்ந்த 33 வயதுடைய ஒருவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,

குறித்த சந்தேகநபர் வீதியால் செல்லும் போது சந்தேகநபருக்கும், காயமடைந்த இளைஞருக்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது. பின்பு அதனை காரணமாக வைத்து சந்தேகநபர், இளைஞரை பொல்லால் தாக்கி காயப்படுத்தியுள்ளார்.

இதனையடுத்து குறித்த சந்தேகநபருக்கெதிராக பொலிஸ் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டுக்கமைய அவரை கடந்த சனிக்கிழமை கைது செய்துள்ளதாக துறைமுக பொலிஸார் கூறியுள்ளனர்.

இந்த நிலையில், காயங்களுக்குள்ளான 27 வயதுடைய இளைஞர் திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபரை பொலிஸார் திருகோணமலை நீதிமன்ற பதில் நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே அவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.