கிண்ணியா சனசமூக நிலையங்களுடனான கலந்துரையாடல்

Report Print Mubarak in சமூகம்

கிண்ணியா சனசமூக நிலையங்களுடனான கலந்துரையாடல் கிண்ணியா நகரசபையின் கேட்போர் கூடத்தில் நேற்றைய தினம் இடம்பெற்றது.

கிண்ணியா நகரசபையின் செயலாளரும், விசேட ஆணையாளருமான நூர்டீன் முஹம்மட் நௌபீஸின் தலைமையில் குறித்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

இதன்போது, எதிர்கால அனர்த்தங்களைக் குறைப்பதற்கான உத்திகள், டெங்கு நுளம்பு பரவும் அபாயங்களைத் தடுத்தல் சனசமூக நிலையங்கள் மற்றும் அந்நிலையங்கள் அமைந்துள்ள பிரதேசங்களின் குறைகளைக் கண்டு நிவர்த்தி செய்தல் மற்றும் எதிர்கால அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டுள்ளது.

இதற்காக ஒவ்வொரு சனசமூக நிலையங்களையும் உள்ளடக்கியதான குழுவொன்றும் இதன்போது அமைக்கப்பட்டுள்ளது.

மேலும் தற்போது நகரசபையினால் முன்னெடுக்கப்பட்டுள்ள விசேட வேலைத்திட்டங்களுக்கும் மற்றும் இனிவரும் காலங்களில் மேற்கொள்ளப்படவுள்ள வேலைத்திட்டங்களுக்கும் சகல ஒத்துழைப்புக்களையும் வழங்கத் தயாராக இருப்பதாக சனசமூக நிலையங்களினால் உறுதியளிக்கப்பட்டுள்ளது.

இறுதியாக டெங்கு அபாயங்களைத் தடுக்கும் நோக்கில் கிண்ணியா நகர்ப்பகுதியின் ஒவ்வொரு பகுதிகளிலும் சனசமூக நிலையங்களுடன் இணைந்து சிரமதானங்கள் மேற்கொள்வதற்கென இதன்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மேலும் குறித்த கலந்துரையாடலின்போது, அலுவலகத்தின் நிர்வாக உத்தியோகத்தர், எம்.பாயிஸ், சனசமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.எச்.பஸீர், தொழில்நுட்ப உத்தியோகத்தர் எம்.றாசித் மற்றும் சனசமூ நிலையங்களின் தலைவர்கள், செயலாளர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.