போலி வீசாக்களை பெற்றுக்கொடுத்து யாழ். மக்களை ஏமாற்றும் முகவர்கள்

Report Print Steephen Steephen in சமூகம்

விடுமுறைகளில் வெளிநாடுகளுக்கு செல்லவும் வேறு வெளிநாட்டுப் பயணங்களுக்காகவும் முகவர்கள் பெற்றுக்கொடுக்கும் வீசா மற்றும் கடவுச்சீட்டுக்கள் குறித்து கூடிய அவதானத்துடன் இருக்குமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கேட்டுள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் உள்ள பலருக்கு விடுமுறை மற்றும் கோயில்களுக்கு யாத்திரை செல்லவும் பெற்றுக்கொடுக்கப்பட்ட வீசா மற்றும் கடவுச்சீட்டுக்கள் என்பன போலியானது என யாழ்ப்பாணம் பொலிஸார் நடத்திய விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

முகவர்களின் இந்த மோசடியில் சிக்கியவர்கள் யாழ்ப்பாணத்தில் பல பகுதிகளில் உள்ள பொலிஸ் நிலையங்களை முறைப்பாடுகளை செய்துள்ளனர்.

இந்தியாவுக்கு செல்ல ஒரு குடும்பத்தை சேர்ந்த மூன்று பேருக்கான ஒரு லட்சத்து 28 ஆயிரம் ரூபாவை அறவிட்டுள்ள முகவர் ஒருவர், அவர்களுக்கு பெற்றுக்கொடுத்த வீசா, பயணச்சீட்டு, கடவுச்சீட்டுக்கள் மற்றும் தங்குமிடத்தை ஒதுக்கியமைக்கு வழங்கப்பட்ட பற்றுச்சீட்டு என அனைத்தும் போலியானது என யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்திற்கு நேற்று கிடைத்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பெற்றுக்கொண்ட பணத்திற்காக கொடுத்த அனைத்து பற்றுச்சீட்டுக்களும் போலியானவை எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதனால், விடுமுறை காலங்களில் குறைந்த செலவில் வழங்கப்படுவதாக கூறப்படும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணங்கள் தொடர்பில் கடும் விழிப்புடன் இருக்குமாறு பொலிஸார் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளனர்.