ஜனாதிபதிக்கும், பிரதமருக்கும் மகஜர் கையளிக்க தயார்

Report Print Rusath in சமூகம்

கிழக்கு மாகாணத்தில் உள்ள முன்பள்ளிகளில் கடமையாற்றும் முன்பள்ள ஆசிரியர்கள் தமது நிலை குறித்த ஜனாதிபதி, பிரதமர் மற்றும் ஆளுநருக்கு மகஜர் மூலம் தெரியப்படுத்த முடிவு செய்துள்ளனர்.

கிழக்கு மாகாணத்தில் சுமார் 3,537 முன்பள்ளி ஆசிரியர்கள் தமது மாதாந்த கொடுப்பனவு, வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு குறித்து இந்த மகஜரை கையளிக்கவுள்ளதாக முன்பள்ளி ஆசிரியர்களின் வாகரைக் கல்விப் பிரிவு இணைப்பாளர் சித்திரவேல் சுவர்ணமுகி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் கிழக்கு மகாண முன்னாள் முதலமைச்சர் ஹாபீஸ் நசீர் அஹமட்டின் ஏறாவூர் அலுவலகத்தில் இன்றைய தினம் இடம்பெற்ற சந்திப்பின்போது முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் குறித்த சந்திப்பின்போது தமது நிலைமைகள் குறித்து கிழக்கு மாகாண முன்பள்ளி ஆசிரியர்கள் முன்னாள் முதலமைச்சரிடம் விரிவாக எடுத்துக்கூறினர்.

தமக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் 3,000 ரூபா மாதாந்தக் கொணடப்பணவை ஏற்கனவே முன்னாள் முதலமைச்சர் தலைமையிலான நிர்வாகம் மேற்கொண்ட தீர்மானத்திற்கமைய 10,000 ரூபாவாக அதிகரிக்க வேண்டும் எனவும் இதற்கான தமது கோரிக்கையை பரிசீலிக்குமாறும் முன்பள்ளி ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது தொடர்பில் கிழக்கு மாகாண முன்பள்ளி ஆசிரியர்கள் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,

யுத்த காலம் தொடக்கம் தற்போது வரை பெரும் சிரமத்திற்கும், வாழ்க்கைச் செலவு அதிகரிப்பிற்கும் மத்தியில் தாம் எதிர்காலத் தலைவர்களான முன்பள்ளிச் சிறுவர்களை தக்க முறையில் தயார்படுத்தி பாடசாலைக்கு அனுப்பி வைக்கின்றோம்.

மேலும் இப்பணி முற்றுமுழுவதுமாக தொண்டு அடிப்படையிலேயே இடம்பெற்று வந்தது.

எமது சமூக அர்ப்பணிப்பைக் கருத்திற்கொண்டு முன்னாள் முதலமைச்சர் தலைமையிலான மாகாண நிர்வாகம் கடந்த வருடம் ஜனவரி மாதத்திலிருந்து மாதாந்தம் 3,000 ரூபா கொடுப்பணவை வழங்கி வந்திருந்தது.

இது எமக்கு பெரிய உதவியாகவும், எமது சேவைக்குக் கிடைத்த அங்கீகாரமாகவும் இருந்தது.

எனினும் தற்போதைய வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு மற்றும் போக்குவரத்துச் செலவுகளைக் கருத்திற்கொண்டு கிழக்கு மாகாண சபை நிர்வாகம் ஏற்கனவே தீர்மானித்திருந்தபடி எமது மாதாந்த கொடுப்பனவை 10,000 ரூபாவாக அதிகரிக்கும்படி கேட்டுக்கொள்கின்றோம் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இது தொடர்பில் கிழக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் நஸீர் அஹமட் குறிப்பிடுகையில்,

கிழக்கு மாகாணத்திலுள்ள மொத்த முன்பள்ளி ஆசிரியர்களுக்குமான மாகாண சபையின் வருடாந்த ஒதுக்கீடாக 72 மில்லியன் ரூபா தேவையாகவுள்ளது.

உண்மையில் மற்றெல்லா அபிவிருத்திகளையும் விட இந்த நாட்டின் எதிர்கால சந்ததிகளை எல்லாத் துறைகளுக்குமாகத் தயார்படுத்தும் முன்பள்ளி ஆசிரியைகளின் பணி மதிக்கப்பட்டு அவர்களது வாழ்க்கைச் சுமையும் நீக்கப்படுதற்கு முக்கிய கவனம் செலுத்த வேண்டும்.

இதற்கு கட்சி, இன, மத பேதமின்றி அனைத்துத் தரப்பாரும் ஆதரவு தந்து முன்பள்ளி ஆசிரியைகளின் வாழ்க்கை மேம்பாட்டுக்காக திட்டங்களை வகுக்க வேண்டும், இந்த விடயத்தை இந்த ஆண்டின் வரவு செலவுத் திட்டத்திற்குள் உள்வாங்குவதற்கு அரசியல் அழுத்தங்கள் தேவை என தெரிவித்துள்ளார்.