கே.பிக்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்தது மேன்முறையீட்டு நீதிமன்றம்

Report Print Steephen Steephen in சமூகம்

விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் பிரதான ஆயுத விநியோகஸ்தரும் சர்வதேச தலைவருமான கே.பி. என்ற குமரன் பத்மநாதனை கைதுசெய்து அவருக்கு எதிராக வழக்கு தொடர உத்தரவிடுமாறு கோரி மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தாக்கல் செய்திருந்த மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்துள்ளது.

மனுவை விசாரணைக்கு எடுக்க அடிப்படை காரணம் எதுவுமில்லை என கூறி மேன்முறையீட்டு நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்துள்ளது.

குமரன் பத்மநாதன் நாட்டை விட்டு வெளியேற மேன்முறையீட்டு நீதிமன்றம் இதற்கு முன்னர் தடையுத்தரவை பிறப்பித்திருந்தது.

இந்த மனு எல்.டி.பி. தெஹிதெனிய, ஷிரான் குணரத்ன ஆகிய நீதியரசர்கள் முன்னிலையில் விசாரணைக்கு எடுக்கப்பட்டது. விஜித ஹேரத்தின் மனுவில், சட்டமா அதிபர், பொலிஸ் மா அதிபர் மற்றும் குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர் ஆகியோர் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டிருந்தனர்.

கே.பி. தற்போது கிளிநொச்சி பிரதேசத்தில் சுதந்திரமாக நடமாடுவதாகவும் அவரை கைதுசெய்து அவர் சம்பந்தப்பட்ட குற்றங்களுக்காக வழக்கு தொடருமாறு பிரதிவாதிகளுக்கு உத்தரவிடுமாறும், கே.பி. நாட்டில் இருந்து தப்பிச் செல்லக் கூடும் என்பதால், அவரை நாட்டில் இருந்து வெளியேற தடையுத்தரவு பிறப்பிக்குமாறு விஜித ஹேரத் தனது மனுவில் கோரியிருந்தார்.