மன்னாரில் கடற்படையினருக்கும் மக்களுக்கும் இடையில் முறுகல்

Report Print Ashik in சமூகம்

மன்னார் தாழ்வுபாட்டு கடலில் மீன் பிடிக்கச் சென்ற சுமார் 25 மீனவர்களை கடற்படையினர் கைது செய்தமையால் அந்தப்பகுதியில் பதற்ற நிலைமை ஏற்பட்டுள்ளது.

மீனவர்களின் கைதினை அடுத்து கடற்படையினருக்கும், தாழ்வுபாட்டு கிராம மக்களுக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும், குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

மன்னார் தாழ்வுபாட்டு கிராம மீனவர்கள் இன்றைய தினம் காலை வழமை போல் மீன் பிடிக்க கடலுக்குச் சென்றுள்ளனர்.

இவர்கள் பாரம்பரிய தொழிலாக கடந்த 30 வருடங்களுக்கு மேலாக சுருக்கு வலையினை பயன்படுத்தியே மீன் பிடியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் தொழிலுக்குச் சென்ற தாழ்வுபாட்டு மீனவர்களில் 5 படகுகளைச் சேர்ந்த 25 மீனவர்களை கடற்படையினர் கடலில் வைத்து கைது செய்து தாழ்வுபாட்டு கடற்படை முகாமிற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

மீனவர்கள் கைது செய்யப்பட்டதினை அறிந்து கொண்ட கிராம மக்கள் ஒன்று திரண்டு தாழ்வுபாட்டு கடற்கரை முகாமை நோக்கி சென்று எதிர்ப்பினை வெளியிட்டுள்ளனர்.

குறித்த கிராமத்தைச் சேர்ந்த பல நூற்றுக்கணக்கான மக்கள் கடற்படை முகாம் அமைந்துள்ள பகுதியில் சூழ்ந்து கொண்டமையினால் அங்கு பதற்ற நிலை ஏற்பட்டிருந்தது.

அதனைத் தொடர்ந்து மன்னார் பொலிஸார் மற்றும் கடற்தொழில் திணைக்கள அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து மக்களுடன் கலந்துரையாடினர்.

எனினும் கடற்படையினர் கைது செய்த குறித்த 25 மீனவர்களையும் உடனடியாக விடுவிக்குமாறும் விடுவிக்காத பட்சத்தில் கடற்படை முகாமை விட்டு செல்லப் போவதில்லை எனத் தெரிவித்துள்ளனர்.

மீனவர்கள் ஏன் கைது செய்யப்பட்டார்கள் என்பது தொடர்பில் கிராம மக்கள் கடற்படையினரிடம் கேட்ட போது, மீன் பிடிப்பதற்கான அனுமதிப்பத்திரத்தை தம் வசம் வைத்திருக்கவில்லை என கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு வந்த மன்னார் பொலிஸார் தாழ்வுபாட்டு கிராம மக்களுடன் கலந்துரையாடிய பின்னர் பொலிஸார் வழங்கிய வாக்குறுதிக்கு அமைவாக கைது செய்யப்பட்ட 25 மீனவர்களையும் கடற்படையினரிடம் இருந்து பொலிஸார் பொறுப்பேற்று மன்னார் பொலிஸ் நிலையம் அழைத்துச் சென்றுள்ளனர்.

குறித்த மீனவர்கள் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மன்னார் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மன்னார் மாவட்டத்தின் பல பிரதேசங்களில் தடை செய்யப்பட்ட மீன்பிடி தொழில்கள் இடம்பெறுகின்றன. எனினும் தாழ்வுபாட்டு பிரதேசத்தில் மாத்திரம் கடற்படையினர் கைது நடவடிக்கைகளை மேற்கொள்வதாக மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

Latest Offers