வடக்கில் 102 தாதியர்களுக்கு நியமனக்கடிதம் வழங்கி வைப்பு!

Report Print Suthanthiran Suthanthiran in சமூகம்

வடமாகாண வைத்தியசாலைகளில் பணியாற்றிய 70 தாதியர்கள் வேறு மாகாணங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில், மாகாணத்திற்கு வழங்கப்பட்ட 110 தாதியர்களில் 102 தாதியர்களுக்கு இன்று நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டுள்ளன.

அதேபோல் புதிதாக மாகாணத்திற்கு 9 பொது சுகாதார பரிசோதகர்கள் பணியில் இணைக்கப்பட்டு, அவர்களுக்கும் இன்று நியமனங்கடிதங்கள் வழங்கப்பட்டுள்ளன.

மேற்படி விடயம் நியமனங்கள் தொடர்பாக மாகாண சுகாதார அமைச்சர் வைத்திய கலாநிதி ஞா.குணசீ லன் ஊடகங்களுக்கு தகவல் தருகையில்,

வடமாகாணத்திலிருந்து வேறு மாகாணங்களுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டிருந்த 70 தாதியர்களுக்கு இன்று இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

அதேவேளை வட மாகாண வைத்தியசாலைகளில் பணியாற்ற 110 தாதியர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். அவர்களில் 102 பேருக்கு நியமனக்கடிதங்களை இன்று வழங்கியுள்ளேன்.

அதேபோல் புதிதாக 9 பொது சுகாதார பரிசோதகர்களுக்கும் நியமன கடிதங்களை வழங்கியிருக்கின்றேன். மேலும் வடமாகாணத்தில் இரத்த சுத்திகரிப்பு சிகிச்சை தொகுதியை வைத்திருக்கும் 7 வைத்தியசாலைகள் உள்ளன.

அவற்றுக்கு முன்னுரிமை அடிப்படையில் 2 தாதியர்கள் வீதம் பகிர்ந்து கொடுத்துள்ளோம். மேலதிகமாக உள்ள தாதியர்களை தேவை அடிப்படையினர் 5 மாவட்டங்களுக்கும் பகிர்ந்து கொடுத்திருக்கின்றோம் என்றார்.

இதேவேளை வடமாகாணத்திற்கு வழங்கப்பட்ட 110 தாதியர்களில் 108 பேர் பெரும்பான்மை இனத்தை சேர்ந்தவர்கள் என வெளியாகும் தகவல் தொடர்பாக சுகாதார அமைச்சரிடம்கேட்டபோது,

பெரும்பான்மை இனத்தை சேர்ந்த தாதியர்களே என கூறியதுடன், தமிழ் இளைஞர், யுவதிகள் தாதிய உத்தியோகத்திற்கான விண்ணப்பங்களை செய்வதில்லை.

இதனால் பெரும்பான்மை இனத்தை சேர்ந்த இளைஞர், யுவதிகளே விண்ணப்பங்களை செய்து வட மாகாணத்திற்கும் சேவை செய்ய அனுப்பப்படும் நிலை காணப்படுகின்றது என்றார்.