வடக்கு மாகாண கலாச்சார அலுவல்கள் திணைக்களத்தினால் வழங்கப்பட்ட சான்றிதழில் தமிழ் கொலை!

Report Print Thileepan Thileepan in சமூகம்

வடக்கு மாகாண பண்பாட்டு அலுவல்கள் மற்றும் கலாச்சார அலுவல்கள் திணைக்களத்தால் வழங்கப்பட்ட சான்றிதழில் தமிழ் எழுத்துப் பிழைகள் காணப்படுவதாக பலரும் விசனம் வெளியிட்டுள்ளனர்.

வடக்கு மாகாண கல்வி அமைச்சின் கீழான குறித்த திணைக்களத்தின் அனுசரணையுடன், பண்பாட்டு விழா வவுனியா நகரசபை மண்டபத்தில் இன்றைய தினம்(04) நடைபெற்றது.

இதன்போது, விருது வழங்குவதற்காக தெரிவு செய்யப்பட்ட கலைஞர்களுக்கு வழங்கப்பட்ட சான்றிதழில் தமிழ் எழுத்துப் பிழை காணப்பட்டமை குறித்து கலைஞர்கள் பலரும் விசனம் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் விருதுகளை பெற்ற கலைஞர்களுக்கும் விருதுகளில் பெயர் மாறிப் பொறிக்கப்பட்டிருந்ததாகவும், இதனால் பலரும் மீண்டும் விருதுகளை கலாச்சார உத்தியோகத்தரிடம் ஒப்படைத்து விட்டு ஏமாற்றத்துடன் வீடு திரும்பியதாகவும் கவலை வெளியிட்டுள்ளனர்.

இதேவேளை, இவ்வாறான விடயங்கள் குறித்து வடக்கு மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் அமைச்சு கவனம் செலுத்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.