வவுனியா கல்வியியல் கல்லூரியில் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் தினம் அனுஷ்டிப்பு

Report Print Theesan in சமூகம்

வவுனியா தேசிய கல்வியியல் கல்லூரியில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் தினம் சிறப்பான முறையில் நடைபெற்றது.

இந்த நிகழ்வு, இன்றைய தினம்(04) பிற்பகல் 2.00 மணிக்கு நடைபெற்றுள்ளது.

சீட் நிறுவனம், சேவ் அக்ற் , வரோட், ஓகான் மற்றும் வவுனியா தேசிய கல்வியியல் கல்லூரியின் சமூக விஞ்ஞான மன்றம் என்பன மாவட்ட சமூக சேவை அலுவலகத்துடன் இணைந்து இத்தினத்தை உணர்வு பூர்வமாக அனுஷ்டித்துள்ளனர்.

குறித்த நிகழ்வு, தேசிய கல்வியியல் கல்லூரியின் புதிய பீடாதிபதி க. சுவர்ணராஜா தலைமையில் நடைபெற்றது.

சிறப்பம்சமாக அரச, அரச சார்பற்ற உத்தியோகத்தர்களிடையே நடந்து வரும் வினாடி வினாப்போட்டியின் அரை இறுதிப்போட்டிகளும் இன்று மண்டபத்தில் கல்லூரி மாணவர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

இதில் வவுனியா மாவட்ட செயலகம், வவுனியா வடக்கு பிரதேச செயலகம், வெண்கலச்செட்டிகுள பிரதேச செயலகம், கமநல அபிவிருத்தி திணைக்களம் என்பன பங்கு பற்றின.

வவுனியா மாவட்ட செயலக அணி மற்றும் வவுனியா வடக்கு பிரதேச செயலக அணி என்பன இறுதிப்போட்டிக்கு தெரிவாகியுள்ளன. மூன்றாம் இடத்தை கமநல அபிவிருத்தி திணைக்களம் பெற்றுக்கொண்டது.

இதேவேளை, இறுதிப்போட்டி எதிர்வரும் 12.12.2017 வவுனியாவில் நடைபெறவுள்ள மாகாணமட்ட மாற்றுத்திறனாளிகள் தினவிழாவில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.