வித்தியா படுகொலை வழக்கில் நீதிமன்றம் பிறப்பித்த முக்கிய கட்டளை

Report Print Murali Murali in சமூகம்

புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கின் முக்கிய குற்றவாளியான சுவிஸ்குமார் பொலிஸ் தடுப்பு காவலில் இருந்து விடுவிக்க உதவிய குற்றச்சாட்டு வழக்கில் ஊர்காவற்றுறை நீதிமன்றம் முக்கிய கட்டளை ஒன்றை பிறப்பித்துள்ளது.

இதன்படி, வழக்கின் 1வது சந்தேகநபரான வட மாகாண முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் லலித் ஜயசிங்கவுக்கு கீழ் பணியாற்றிய யாழ். மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் என்.எல்.பெரேராவால் வழங்கப்படும் சாட்சியைப் பதிவு செய்ய ஊர்காவற்றுறை நீதிவான் இன்று கட்டளை பிறப்பித்துள்ளார்.

சந்தேகநபரான லலித் ஜயசிங்கவின் சார்பில் மன்றில் முன்னிலையான சட்டத்தரணிகளின் கடும் ஆட்சேபனைகளுக்கு விளக்கத்தை வழங்கிய நீதிவான் ஏ.எம்.எம்.றியாழ், இந்த கட்டளையை பிறப்பித்துள்ளார்.

இது குறித்த வழக்கு விசாரணை யாழ். ஊர்காவற்றுறை நீதவான் எம்.எம்.றியால் முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன் போது நீதவான் இந்த கட்டளையை பிறப்பித்துள்ளார்.

வழக்கின் 1வது சந்தேகநபரான வட மாகாண முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் லலித் ஜயசிங்கவுக்கு கீழ் பணியாற்றிய யாழ். மாவட்ட பிரதிப் பிரதி பொலிஸ்மா அதிபர் என்.எல்.பெரேரா, வழக்கின் சந்தேகநபர்களுக்கு எதிராக சாட்சியமளிக்கத் தாமாக முன்வந்துள்ளார் என மன்றுக்கு அறிவிக்கப்பட்டது.

அதனடிப்படையில் அவர் நேற்று மன்றுக்கு வருகை தந்திருந்தார். அவரின் சாட்சியம் பதிவதற்கு வசதியாக சாவகச்சேரி நீதிவான் மன்றத்தின் உரைபெயர்ப்பாளர், ஊர்காவற்றுறை நீதிமன்றுக்கு இன்று அழைக்கப்பட்டிருந்தார்.

எனினும், சாட்சியமளிப்பதாக முன்வரும் சாட்சியை நீதிவான் நீதிமன்றம் அனுமதிக்க முடியாது. அவர் தாமாகவே சாட்சியமளிக்க முன்வந்தார் என்பதை எவ்வாறு உறுதிப்படுத்துவது? என சந்தேகநபர் லலித் ஜயசிங்கவின் சட்டத்தரணிகள் ஆட்சேபனை தெரிவித்தார்.

“சாட்சியமளிக்க ஒருவர் முன்வந்தால் அவரது சாட்சியத்தை பதிவு செய்யவேண்டியது நீதிமன்றின் பொறுப்பு. அவ்வாறாகவே இந்த சாட்சியாளரையும் நீதிமன்றம் அனுமதியளிக்கிறது” என்று நீதிவான் சுட்டிக்காட்டினார்.

மேலும், இந்த வழக்குத் தொடர்பில் சாட்சிகளாகக் குறிப்பிடப்பட்ட இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா உள்ளிட்டோரிடம் பெறப்பட்ட வாக்குமூலங்கள் அடங்கிய அறிக்கை குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் மன்றில் சமர்பிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் வழக்கு விசாரணைகளை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 28ஆம் திகதிக்கு நீதவான் ஒத்திவைத்துள்ளார்.