யாழ்.குடாநாட்டில் நவீன தொழில்நுட்பத்தில் கடல் போக்குவரத்து : டக்ளஸ் எம்.பி கோரிக்கை

Report Print Nivetha in சமூகம்

யாழ்.குடாநாட்டில் கடல் போக்குவரத்தினை இலகுபடுத்தி, பாதுகாப்பினை வழங்கும் நவீன தொழில்நுட்பம் அமைக்கப்பட வேண்டும் என்று ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்று இடம்பெற்ற குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். இதன்போது, தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,

யாழ்.குடாநாட்டில் கடல் நீர் ஏரியைப் பயன்படுத்தி, குருநகர், பாஷயூர், கொழும்புத்துறை, அரியாலை, கோவிலாக்கண்டி, தனங்கிளப்பு, சாவகச்சேரி, கச்சாய், பூநகரி, நல்லூர், மண்ணித்தலை, மண்டைதீவு பகுதிகளில் வாழ்ந்து வருகின்ற கடற்றொழிலாளர்கள் தங்களுக்கான வாழ்வாதாரங்களை ஈட்டி வருகின்றனர்.

இந்த நிலையில், இவர்களுக்கான கடற் போக்குவரத்தினை இலகுபடுத்தி, பாதுகாப்பினை வழங்கும் வகையில் எவ்விதமான நவீன தொழில்நுட்பங்களும் இல்லாது உள்ளது.

இதுவரையில் மின்னல் தாக்கி 7 பேர் உயிரிழந்துள்ளனர். எனவே, நவீன தொழில் நுட்பத்தைக் கொண்டதாக வெளிச்ச வீடு, இடிதாங்கி என்பன அமைக்கப்பட வேண்டும்.

நெடுந்தீவுப் பிரதேசத்தில் வசதியானதொரு நங்கூரமிடும் தளம் அமைக்கப்பட வேண்டியுள்ளதாகவும் கூறியுள்ளார்.

யாழ் மாவட்டத்தில் சுமார் 700, 19 அடி படகுகள் இதுவரையில் பதிவு செய்யப்படாமல் உள்ளதாகத் தெரிய வருகின்றது. இவை அனைத்தும் இனங்காணப்பட்டு, பதிவு செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.

தீவகப் பகுதிகளில் சுழியோடி மூலமாகவே கடற்றொழிலாளர்கள் கடலட்டை அறுவடையில் ஈடுபடுகின்றனர். இதற்கான அனுமதிகள் மறுக்கப்பட்டு வருவதாகத் தெரிய வரும் நிலையில் அது தொடர்பில் ஆராய்ந்து, அனுமதி வழங்குவதற்கான உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படல் வேண்டும்.

அத்துடன், இம்முறை வரவு – செலவுத் திட்டத்தில் ஆழ்கடல் மீன்பிடியினை ஊக்கப்படுத்தும் வகையில் 55 அடிகளுக்கு கூடிய நீளமான பல நாள் படகுகளின் கொள்வனவுச் செலவில் 50 சதவீதத்தினை அரசாங்கம் ஏற்றுக் கொள்ளும் எனக் கூறப்பட்டுள்ளது.

எமது பகுதியினைப் பொறுத்தவரையில், 55 அடிக்கு கூடிய படகுகளை இணைப்பதற்கான மீன்பிடித் துறைமுக வசதிகள் இல்லாத நிலை காணப்படுகின்றது.

இதேவேளை, 36 அடி மற்றும் 36 அடிக்குக் கூடிய படகுகளுக்கு மேற்படி மானிய உதவிகளையும், அத்தகைய படகுகளைத் தயாரிப்பதற்கான அனுமதியும் வழங்கப்படக்கூடிய சாத்தியங்கள் தொடர்பில் ஆராயப்பட வேண்டும் என்றும் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.