வவுனியாவில் 286ஆவது நாளாகவும் தொடரும் போராட்டம்

Report Print Theesan in சமூகம்

தங்களது உறவுகளை மீட்டுத்தருமாறு கோரி காணாமற்போன உறவுகளின் தாய்மார்கள் வவுனியாவில் முன்னெடுத்து வரும் கவனயீர்ப்பு போராட்டம் இன்று 286ஆவது நாளாகவும் தொடர்ந்துள்ளது.

இறுதி யுத்தத்தின் போது இராணுவத்தினரிடம் ஓமந்தைச் சோதனைச்சாவடியில் வைத்து கையளிக்கப்பட்ட தமது உறவுகளை மீட்பதற்காக கடந்த 286 நாட்களாக வவுனியா பிரதான வீதியில் தபாலகத்திற்கு அருகில் சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்புப் போராட்டத்தினை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.

மழை, வெயில், குளிரையும் பொருட்படுத்தாமல் அனைத்து தரப்பினராலும் கைவிடப்பட்ட போராட்டமாக தற்போது காட்சியளிக்கின்றது.

உள்ளூராட்சித் தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையில் அரசியற்கட்சிகள் தமது இருப்பை தக்கவைப்பதற்கான பங்கீடு தொடர்பில் ஒவ்வொரு கட்சிகளும் போட்டிபோட்டுக்கொண்டு செயற்பட்டு வருகின்றனவே தவிர இவ்வாறு போராட்டம் மேற்கொண்டு வருபவர்களின் நிலையினைக் கருத்திற்கொண்டு உரிய தீர்வினைப் பெற்றுக்கொடுப்பதற்கு எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளாத ஒரு போராட்டமாகவே நகர்ந்துகொண்டு செல்கின்றது என தெரிவிக்கப்படுகின்றது.