ஆர்ப்பாட்டம் நடத்த முற்பட்ட பட்டதாரிகளால் அசாதாரண நிலை

Report Print Kumar in சமூகம்

மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரதான போக்குவரத்து பாதையான கல்லடி பாலத்தினை மறித்து வேலையற்ற பட்டதாரிகள் ஆர்ப்பாட்டம் நடத்த முற்பட்டபோது அங்கு அசாதாரண நிலையேற்பட்டுள்ளது.

வேலையற்ற பட்டதாரிகளுக்கு பெரும் அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து இன்று மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு, கல்லடி பாலத்தில் ஒன்று கூடிய பட்டதாரிகள் தங்களுக்கு இந்த நல்லாட்சி அரசாங்கம் வேலைகளைப் பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது தொடர்பில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பட்டதாரிகள் தெரிவிக்கையில்,

பட்டதாரிகள் போட்டி பரீட்சையில் திருகோணமலை மாவட்டத்தில் 98 புள்ளிகளை பெற்ற ஒருவர் தொழில்பெறும் போது 110 புள்ளிகளை பெற்ற மட்டக்களப்பு பட்டதாரிகள் தொழில் வழங்கப்படாமல் புறக்கணிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன், கிழக்கு மாகாணசபையும் மத்திய அரசாங்கமும் எமது போராட்டத்திற்கு இதுவரை நியாயமான தீர்வினை வழங்கவில்லை என சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந்த நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கல்லடி பாலத்தினை மறித்து போராட்டத்தை நடத்த முற்பட்ட போது அங்கு அசாதாரண நிலை ஏற்பட்டுள்ளது.

இதன்போது அங்கு வந்த மட்டக்களப்பு பொலிஸார், அவர்களுடன் கலந்துரையாடலை மேற்கொண்டதுடன் பொதுமக்களின் போக்குவரத்துக்கு இடைஞ்சல்களை ஏற்படுத்தவேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ளனர்.

இதனையடுத்து, வீதியை மறித்து போராட்டம் நடத்திய பட்டதாரிகள் மீண்டும் வீதியில் ஒரு பக்கமாக நின்று தமது போராட்டங்களை தொடர்ந்து நடத்தியதுடன் மாவட்ட அரசாங்க அதிபரிடம் மகஜரொன்றையும் கையளித்துள்ளனர்.