வயல் நிலமாக காட்சி தரும் பஸ் நிலையம்

Report Print Navoj in சமூகம்

கொழும்பு - ஓட்டமாவடி பிரதான வீதியின் அருகாமையில் அமைந்துள்ள பஸ் தரிப்பு நிலையம் முறையாக அமைக்கப்படாமையினாலும், உரிய பராமரிப்பு இன்மையாலும் பல்வேறு குறைபாடுகளுடன் அடிப்படைத் தேவைகளை வேண்டி நிற்கின்றது.

ஓட்டமாவடி பிரதேசத்தில் நீண்ட காலமாக பிரதான பஸ் தரிப்பு நிலையம் அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை இப்பிரதேச மக்களினால் முன்வைக்கப்பட்டு வந்தது.

இதற்கமைவாக வடக்கு கிழக்கு உள்ளூராட்சி மேம்படுத்துகை (நெல்சிப்) திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபையின் பஸ் தரிப்பிடம் முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நஸீர் அஹம்மட்டினால் திறந்து வைக்கப்பட்டது.

பெரும் தொகையான மக்களின் பணத்தைக் கொண்டு அமைக்கப்பட்ட இந்த பஸ்தரிப்பு நிலையமானது குறுகிய காலத்துக்குள்ளேயே மக்களின் பாவணைக்கு உதவாத வகையில் மாறிவருவதாகவும், இந்த பஸ் தரிப்பு நிலையம் முறையான திட்டமிடல் இன்றி நிர்மாணிக்கப்பட்டதாகவும் பொது மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

இந்த பஸ் நிலையத்தில் பயணிகள் இளைப்பாறும் கூடம், மோட்டார் சைக்கிள் தரிப்பிடமாக மாறிவருவதுடன் அங்கு பொருந்தப்பட்டிருந்த மின் விசிறிகள் மற்றும் மின் குமிழ்கள் என்பன மாயமாக மறைந்துள்ளன.

பஸ் நிலையத்தின் சுற்றுச் சூழல் குப்பை கூழங்களாலும், பிளாஸ்டிக் உள்ளிட்ட பொலித்தீன்களாலும் காணப்படுவதுடன், மழைநீர் வடிந்தோடும் காண்கள் நிரம்பி

காணப்படுவதுடன், அங்கு துர்நாற்றம் வீசி சுற்றுசூழல் மாசடைத்தும் காணப்படுகின்றது.

மேலும் அங்குள்ள மலசலகூடங்களில் பொருத்தப்பட்டுள்ள நீர்க் குழாய்கள் உடைந்து காணப்படுவதனால் மலசலகூடத்தை பயன்படுத்த முடியாத நிலைமையில் இருப்பதுடன் பஸ் தரிப்பு நிலைய வளாகமும் உரிய முறையில் செப்பணிடப்படாமல் காணப்படுகின்றது.

இதனால் வளாகத்தினுள் மழைநீர் தேங்கி நிற்பதனால் வளாகம் சாக்கடையாக மாறியுள்ளது. பஸ்தரிப்பு நிலையம் திறக்கப்பட்டு சில காலங்களிலேயே மக்களின் பயன்பாட்டுக்கு உதவாத வகையில் மாறியுள்ளது.

பஸ் நிலையத்தினுள் முறையாக செப்பனிப்படாத பகுதி உள்ளதனால் சிறு மழைக்கும் இப்பகுதி வேளான்மைக்கு உகந்த பிரதேசமாக காட்சியளிப்பதாகவும், அப்பகுதி சேறும் சகதியுமாக காணப்படுவதால் பஸ் வண்டிகள் உள் செல்லாமல் வீதிக்கு வெளியில் நிறுத்தப்படுவதனால் பயணிகள் விபத்துக்களுக்கு முகங்கொடுக்க நேரிவதாகவும் கவலை தெரிவிக்கின்றனர்.

பஸ்தரிப்பிடம் நிர்மாணிப்பதற்கு முன்பும் இவ்வாறான நிலைமையைத்தான் பயணிகள் எதிர்கொண்டனர். சில வேளை பஸ்களுக்காக பயணிகள் இளைப்பாறும் கூடத்தில் இருந்து பஸ் நிறுத்தும் இடத்திற்கு ஓட்டமும் நடையுமாக செல்லும் போது விபத்துக்களை சந்திக்கவும் நேரிடுவதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பாக பொது மக்களினால் பொறுப்பு வாய்ந்த அதிகாரிகளுக்கு பல முறை சுட்டிகாட்டப்பட்டும் எவ்வித நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை என மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.