சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பில் மாபெரும் பேரணி

Report Print Navoj in சமூகம்

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்ப உறவுகளின் ஏற்பாட்டில் எதிர்வரும் 10ஆம் திகதி சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு மாபெரும் பேரணி நிகழ்வொன்றை ஏற்பாடு செய்துள்ளதாக அந்த அமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பொறுப்பாளர் அமலநாயகி தெரிவித்துள்ளார்.

இந்த நிகழ்வு தொடர்பில் ஊடகங்களுக்கு தெளிவூட்டும் ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று மட்டக்களப்பு வொயிஸ் ஒப் மீடியாவில் இடம்பெற்றது. இதன்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இது தொடர்பில் மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்,

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்ப உறவுகளின் ஏற்பாட்டில் எதிர்வரும் 10ஆம், திகதி சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு மாபெரும் பேரணி நிகழ்வொன்றை ஏற்பாடு செய்துள்ளோம்.

நாம் இத்தனை காலமும் தனித்து நின்று பல போராட்டங்களை நடத்தினோம். இம்முறை மக்களின் ஆதரவுடன் இந்த பேரணியை நடத்தவுள்ளோம்.

பொது மக்கள், பல்கலைக்கழக மாணவர்கள், ஊடகவியலாளர்கள், தனியார் போக்குவரத்துச் சங்கத்தினர், முச்சக்கரவண்டி சாரதிகள், இலங்கைப் போக்குவரத்துச் சபை, வர்த்தக சங்கங்கள், பல்கலைக்கழக ஊழியர்கள், மட்டக்களப்பு மறைமாவட்ட ஆயர், மதகுருமார்கள்,

இந்து இளைஞர் சங்கங்கள், சிவில் அமைப்புகள், ஆசிரியர் சங்கங்கள், பாடசாலை மாணவர்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள் என அனைவரும் நாங்கள் ஏற்பாடு செய்துள்ள பேரணியில் கலந்து கொண்டு அரசிற்கும், சர்வதேசத்திற்கும் பாரிய அழுத்தத்தைக் கொடுக்கக் கூடிய விதத்தில் ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

பலரினுடைய ஒத்துழைப்புகள் மூலம் நாங்கள் பல ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டிருந்தாலும் இந்த முறை அனைத்து தரப்பினரையும் ஒன்றிணைத்தவாறு இந்த பேரணியை ஏற்பாடு செய்துள்ளோம்.

இவ்வாறான ஆதரவுகள் மூலமே எமது பிரச்சினைகளை சர்வதேசத்திற்கும் அரசிற்கும் கொண்டு சேர்க்க முடியும். முக்கியமாக ஊடக நண்பர்களின் பங்குபற்றல்களையும் நாங்கள் எதிர்பார்க்கின்றோம்.

காணாமலாக்கப்பட்டோர் காரியாலயம் தொடர்பில் நாங்கள் பல தடவைகள் ஜனாதிபதியுடன் கலந்துரையாடியுள்ளோம். அவரது தலைமையில் இது எந்தளவிற்கு வெற்றி பெறும் என்பது ஒரு கேள்விக்குறியாகவே இருக்கின்றது. அப்படி காரியாலயங்கள் அமைக்கப்படுமாயின் அது எமது மாவட்டத்திலும் அமைக்கப்பட வேண்டும்.

நாம் காணாமலாக்கப்பட்டோர் காரியாலம் தொடர்பில் இந்தப் பேரணியை ஏற்பாடு செய்யவில்லை. அன்றைய மனித உரிமைகள் தினத்தில் காணாமலாக்கப்பட்ட உறவுகளின் குடும்ப உறவுகளினால் மேற்கொள்ளப்பட்ட போராட்ட வடிவங்களில் இதுவும் ஒரு வடிவமாக அமைய இருக்கின்றது.

எமது காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் தொடர்பில் எவ்வாறான விடயத்தினைத் தெரிவிக்க இருக்கின்றோம் என்பதை அன்றைய தினத்தில் தெரிவிப்போம்.

நாங்கள் தொடர் போராட்டங்கள் என்கின்ற ரீதியில் கூடாரம் அமைத்து இருந்தோமானால் எமது குடும்ப நிலைமைகள் இன்னமும் பாதிக்கப்படும். முக்கியமாக எமக்குப் பாதுகாப்பு இல்லாத தன்மை காணப்படுகின்றது.

வடக்கில் இடம்பெறும் போராட்டங்களுக்கு நாங்கள் எங்களாலான ஆதரவினையும் வழங்கிக் கொண்டு வருகின்றோம்.

அது போன்று தொடர் போராட்டங்கள் மேற்கொள்ளாவிடினும், அவ்விடத்தில் நாங்கள் இல்லாவிடினும் எட்டு மாவட்டத்தினரும் சேர்ந்து எமது ஆதரவினை வழங்கி வருகின்றோம்.

மேலும், நடைபெறவுள்ள எமது பேரணிக்காக மேற்குறிப்பிட்டவற்றுள் பலருக்கு தொடர்புகளை ஏற்படுத்தி தெரிவித்திருக்கின்றோம். இதற்கும் மேலதிகமாக ஊடகங்களையே சார்ந்திருக்கின்றோம் என குறிப்பிட்டுள்ளார்.