இலங்கையில் வெளிநாட்டவர்களை ஏற்றிச் சென்றவருக்கு நெஞ்சுவலி! சாரதியின் மோசடி அம்பலம்!

Report Print Vethu Vethu in சமூகம்

பெருந்தொகை பணத்தை கொள்ளையடிப்பதற்காக நாடகமாடிய சாரதி ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

நெஞ்சு வலிப்பது போன்று நடித்து காலியில் பணத்தை கொள்ளையடித்த நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பிலிருந்து வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை ஏற்றிச் சென்ற நவீன வாகனம், காலியிலுள்ள பழக்கடை ஒன்றுக்கு அருகில் நேற்று மாலை 6 மணியளவில் நிறுத்தப்பட்டுள்ளது.

இதன்போது குறித்த வாகனத்தின் சாரதி திடீரென நெஞ்சை பிடித்தவாறு வாகனத்தை விட்டு இறங்கியுள்ளார். பின்னர் தனக்கு நெஞ்சு வலிப்பதாக அவர் கூறியுள்ளார்.

அங்கிருந்தவர்கள் உடனடியாக அவருக்கு முதலுதவி அளித்துள்ளனர். இதன்போது வாகனத்தின் சாவி, பணப்பை மற்றும் தனது கையடக்க தொலைப்பேசி வாகனத்திற்குள் இருப்பதாக வாகன சாரதி தனது உதவியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

முதலுதவிகளை பெற்ற பின்னர் அவர் உடனடியாக அருகிலுள்ள வைத்தியசாலைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார். அவரது வலியுறுத்தலின் பேரில் இது தொடர்பில் அறிவிப்பதற்காக தொலைபேசி அழைப்பொன்றை அவர் மேற்கொண்டுள்ளார்.

இதன் பின்னர் சற்று நேரத்தில் குறித்த வாகனத்தின் உரிமையாளர் சம்பவ இடத்திற்கு வந்துள்ளார். வாகனத்தின் உரிமையாளர் மஹாமோதர பிரதேசத்தை சேர்ந்த ஒருவராவார்.

அவர் வாகனத்தின் கதவை திறந்த போது சாரதியின் பணப்பை வாகனத்திற்குள் காணப்பட்டுள்ளது. உரிமையாளரின் கணக்குப்படி அந்த பணப்பையில் கிட்டத்தட்ட 804, 000 ரூபாய் இருந்திருக்க வேண்டும். எனினும் அந்த பணப்பையில் ஒரு சதமேனும் காணப்படவில்லை.

மூன்று வார நீண்ட பயணத்திற்காக வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் குறித்த சாரதிக்கு 804,000 ரூபாய் செலுத்தியுள்ளனர்.

சாரதி வைத்தியசாலையில் இருந்து வந்த அடுத்த நாள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவருக்கு மாரடைப்போ நெஞ்சு வலியோ ஏற்படவில்லை எனவும், வாகனத்தின் உரிமையாளரை ஏமாற்றுவதற்காகவே அவர் நாடகமாடியுள்ளார் எனவும் கண்டுபிடிக்கப்பட்டமையினால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பண்டாரவளையைச் சேர்ந்த 38 வயதுடைய சாரதியே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். அவரது வாகனத்தில் பயணித்த சுற்றுலா பயணிகளும் பொலிஸ் நிலையத்திற்கு வந்து தாம் வாகனத்திற்கான பணத்தை செலுத்திவிட்டதாக வாக்குமூலம் வழங்கியுள்ளனர்.

தான் அவர்களிடம் பணத்தை பெற்றுக் கொண்டதனை சாரதியும் ஏற்றுக் கொண்டுள்ளார். எனினும் சிகிச்சை பெற சென்ற போது பணம் வாகனத்தில் இருந்து திருடப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

எனினும் இது திட்டமிடப்பட்ட நாடகம் என தெரியவந்துள்ள நிலையில் பொலிஸ் அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.