இரட்டைப் படுகொலை தொடர்பில் பிரதிப் பொலிஸ்மா அதிபருக்கு நீதிபதி பிறப்பித்துள்ள உத்தரவு

Report Print Rusath in சமூகம்

ஏறாவூரில் தாய் மற்றும் மகள் இரட்டைப் படுகொலை வழக்கை குற்றப்புலனாய்வுப்பிரிவினரிடம் (சி.ஐ.டி) கையளிப்பதற்கான ஏற்ற ஒழுங்குகளை செய்யுமாறு கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபருக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

குறித்த வழக்கு விசாரணை நேற்று ஏறாவூர் சுற்றுலா நீதிவான் நீதிமன்றத்தில் மேலதிக நீதவானும், மேலதிக மாவட்ட நீதிபதியுமாகிய முஹம்மத் இஸ்மாயில் முஹம்மத் றிஷ்வி Additional Magistrate and Additional District Judge Muhammath Ismail Muhammath Rizvi முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதில் படுகொலை செய்யப்பட்டவர்களில் ஒருவரான ஜெனீராபானுவின் (வயது 32) கணவரான ஐ.எம். மாஹிர் தனது தரப்பு சட்டத்தரணியுடன் நீதிபதியின் முன் ஆஜராகி மேற்படி வழக்கு விசாரணையை புலனாய்வுத் துறைக்கு பாரப்படுத்துமாறு வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி விசாரணையை குற்றப்புலனாய்வினருக்கு (சி.ஐ.டி) கையளிப்பதற்கான ஏற்ற ஒழுங்குகளை செய்யுமாறு கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபருக்கு உத்தரவிட்டதுடன் வழக்கை அடுத்த ஆண்டு 2018 ஜனவரி மாதம் 12ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.

படுகொலைச் சந்தேகநபர்கள் அனைவரும் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தனர்.

இதில் ஐந்தாவது சந்தேகநபரான புஹாரி முஹம்மது அஸ்ஹர் (வயது 23) என்பவரை பிணையில் செல்ல அனுமதித்த நீதிபதி உஸனார் முஹம்மது தில்ஷான் (வயது 29) என்பவரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.